Category Archives: இலக்கிய விமர்சனம்

நீரளவே தானா நீராம்பல் : சுமதி சிவமோகனின் எதிர்வினை

நீரளவேதானா நீராம்பல்?

நீ ர ள வே தா னா நீ ரா ம் ப ல் ?

சமகால ஈழத்துப் பெண் கவிதை

1986இல் சொல்லாத சேதிகள். அதற்குப்பிறகு 1992இல் புகலிடத்திலிருந்து மறையாத மறுபாதி தொகுப்பு. இவையிரண்டுக்கும் பிற்பாடு ஈழத்தமிழ்க் கவிதைப் பரப்பில் பெண்கள் எடுத்துக்கொண்ட இடம் எத்தகையது என்பது தொடர்பில் விரிவாகவே பேசப்பட்டுள்ளது. இவற்றின் பின்பாகவே பெண்ணின் தன்நிலைவலுவாக பிரக்ஞைக்கும் பிரச்சனைக்கும் உட்படுத்தப்படுகிறது. பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்த காலப்பகுதியாக 90களை சொல்லலாம்.

மேற்குறித்த கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைப்பிரதிகள் கவிதைகள் தானா? இவை உண்மையாகவே பெண்ணிய அரசியலை பேசுகிற பிரதிகள் தானா? இப்படியான கேள்விகள் ஒருபுறமிருக்க, இத்தொகுப்புகள் முன்னெப்போதுமில்லாத விதத்தில் பெண்ணின் தனித்துவமிக்க குரலை ஈழத்துக் கவிதை வெளிக்குள் ஒலிக்கும் வகை செய்தவை என்பதை மறுக்கவியலாது. சிவரமணி, செல்வி போன்றோரின் கவிதைச்செயற்பாடுகள் இன்னமும் கூட தூக்கியெறியப்பட முடியாத கேள்விகள்தான். 90களில் சிவரமணி கவிதைகள் தொகுப்பாக்கப்பட்டன. அதேபோல் வானதி, தூயவள் ஓன்ற போராளிப்பெண்கவிகளது கவிதைகளும் தொகுப்பு வடிவையடைந்தன. 95இல் சுல்பிகாவின் விலங்கிடப்பட்ட மானுடம்தொகுதி வெளிவந்தது. 90களின் பிற்கூற்றில் உயிர்வெளி‘ ‘கனல்தொகுதிகள் வெளியிடப்பட்டன. இவை தவிர பெண் எழுத்து 90களில் எவ்வாறிருந்தது என்பதற்கான ஆவணங்கள் இல்லை. இக்காலப்பகுதியில் வெளிவந்த சிறுபத்திரிகைகள்/மாற்றுப்பத்திரிகைகள் அனைத்துமே பெண்களால் எழுதப்படும் கவிதை/புனை பிரதிகளுக்கு முக்கியத்துவமளித்து வெளியிட்டன. 90களின் முற்கூற்றில் திசைபத்திரிகை வழியாக மைதிலி அறிமுகமாகிறார். பின்பு சரிநிகர், பூவரசு, மூன்றாவது மனிதன், நோக்கு போன்றவற்றில் பெண்ணியா, கலா, ஔவை, ஆழியாள் ஆகியோர் எழுதினர். தாயகம் இதழும் சில பெண் கவிதைகளை பிரசுரித்திருக்கிறது.

2000மாம் ஆண்டின் பின்னரே அதிகளவு பெண் கவிதைத்தொகுப்புகள் வெளி வந்தன. எழுதாத உன் கவிதைதொகுப்பு நூல், ஆழியாளின் உரத்துப்பேச‘ (மறு.2000) ‘துவிதம்‘ (மறு.2005), ஒளவையின் எல்லை கடத்தல்‘ (மூன்றாவது மனிதன்.2000), மைதிலியின் இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்‘ (காலச்சுவடு.2003), அனாரின் ஓவியம் வரையாத தூரிகை‘ (மூன்றாவ்து மனிதன்.2004), ரஞ்சினி கவிதைகள் (உயிர்மை.2005) பெண்ணியாவின் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை‘ (ஊடறு.2006) என்பன முக்கியமான கவிதைப்பிரதிக் குழுமங்கள். 2000த்திற்கு பின்னர் மூன்றாவது மனிதன், வெளிச்சம் இதழிலும் உயிர்நிழல், அற்றம் போன்ற புகலிட சஞ்சிகைகளிலும் அதிகளவில் பெண் கவிகள் இயங்கினார்கள். ஊடறு இரண்டு தொகுப்பு நூல்களில் பல கவிதைகள் இடம் பெற்றிருந்தன. புகலிடத் தொகுப்புகள் (இன்னுமொரு காலடி, கண்ணில் தெரியுது வானம்) பலவற்றிலும் பெண்களது கவிதைகள் இருந்தன. வீரகேசரி உயிர் எழுத்துபகுதியும் பெண்கள் பலரது கவிதைகளை பிரசுரித்து ஊக்குவித்தது. ஆகர்ஷியா, பிரதீபா, ரி.உருத்திரா, தான்யா, பஹீமா ஜகான், விநோதினி (அநந்திதா), எஸ்.கார்த்திகா, சித்தி றபீக்கா, துர்க்கா, தில்லை, மலரா, ராசு போன்றவர்கள் இக்காலப்பகுதியில் அச்சு ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்டவர்கள். இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் வாயிலாக அறிமுகமானோரில் முதலிடம் கற்பகம் யசோதரவுக்கும் (மூன்றாவது மனிதனிலும் சில கவிதைகள் பிரசுரமாயுள்ளன) ரேகுப்திநிவேதாவுக்கும் உரியது.

2000க்குப் பின்னான ஈழத்துப் பெண்கவிதைப் பரப்பில் பாடுபொருளின் தீவிரம், பெண்ணிய அரசியலையும் கவிதையியலையும் புரிந்து கொண்டமை, பயில் புலத்தின் வடக்கு மையம் அகன்று போதல், முஸ்லிம்/புகலிட அனுபவங்கள் கவிதை வெளிக்குள் வருதல் எனச் சில சாதகமான அம்சங்களை பட்டியலிட முடியும்.

சமூகத்தில் தமது நிலை, தாம் ஒடுக்கப்பட்டவர்களாயிருக்கிறோம் என்பது குறித்த புரிதல் மேற்குறித்த பெண் கவிகள் அனைவரிடமும் உண்டு.

ஆயினும், ‘பெண் எழுத்துஎன்ற வகைமையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், ஈழத்துப் பெண்கவிதையின் போதாமைகள் இலகுவில் புலப்படும். இதுவரையான ஈழத்துப்பெண்கவிதை பெற்று வந்த விமர்சனங்கள் இந்த நிலைக்கு முக்கிய காரணம். பெண்என்பதற்காகவே முன்னுரிமையும் முற்சாய்வும், அணுகல் முறையில் ஒருவித பரிதாபமும் சேர்ந்து விடுகிறது. சிவசேகரம், மு.பொ, மதுசூதனன் என அனைத்து தரப்பினரதும் பலவீனம் இதுதான். பெண்அதிலும் ஈழத்துப் பெண்என்று வருகையில் கவிதை‘ ‘கோட்பாடுஎல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகி விடுகிறது. இந்த பண்பை தீவிர இடதுசாரி விமர்சகரான சி.சிவசேகரம் சொல்லாத சேதிகள்‘ ‘மறையாத மறுபாதிஇரண்டுக்கும் செய்த விமர்சனப் பிரதிகளில் காண முடியும். விமர்சனம் என்பது மிஞ்சிப்போனால் கவிதையியல்/மொழிப்பிரயோகம் சார்ந்ததாக மாத்திரம் தன்னை மட்டிறுத்திக் கொள்கிறது. இவற்றையொட்டியே சி.சிவசேகரத்தின் ஏற்பும் மறுப்பும் அமைந்து விடுவதை துல்லியமாய்க் காண இயலும். குறித்த க்விதைப் பிரதிக் குழுமங்கள் கோரி நின்ற அரசியல் வாசிப்புகளை சிவசேகரமோ அல்லது அக்காலப்பகுதியில் தாமும் கதைத்தாய் நினைப்பவர்களோ செய்யவில்லை. இதன் காரணமாகத்தான், சிவரமணியையொத்த இன்னொருத்தரை இன்றளவும் ஈழத்துக் கவிதைப் பரப்பு சந்திக்கவேயில்லை.

ஈழத்துப் பெண் கவிதைகளில் சிறப்பாக குறித்துச் சொல்லப்பட வேண்டியது ஆயுத வன்முறைக்கெதிராக அக்கவிதைகளில் எழுந்துகொண்டேயிருக்கும் ஈனக்குரலிலான ஓலமும் எதிர்ப்பு மறுப்பும் தான். ஆன்கவிகள் வன்முறையை உவந்தேற்றுப் பாடுபவர்களாக இருந்த காலப்பகுதிகளிலேயே சிவரமணி, மைதிலி, ஔவை போன்றோர் அதை மறுத்துரைப்போராய் இருந்தனர். வன்முறைக்கெதிரான தாயின் அநாதைகுரலாய் இவர்களது கவிதைகள் ஒலித்தன.

பெண்ணாக போரை, வன்முறையை பதிவு செய்வதில் கலாவும் கற்பகம் யசோதரவும் முக்கியமானவர்கள். கலாவின் கோணேஸ்வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கற்பகம் யசோதர வன்முறையின் அவலமிக்க தருணமொன்றை பின்வருமாறு கவிதையாக்குகிறார்;

// அந்தரா, ரூபி, மித்தாலியா..

தூரத்தில் என் பிள்ளைகள் கதறின

தூக்கி குறிபார்த்து கல்லை

எறிய கூடிருந்து சிதறிட

பறவைகள் . கலைந்து

(ஒரு நாயைப் போல கிடந்தாய்)

சேர்ட் பட்டன்கள்

அறுந்து விழுந்து

திறந்த நெஞ்ச மயிர்களில்

சிதறி இரத்தம்

இன்னும் பிளந்தால்

நெஞ்சு வெடித்துக் கதறும்

என் பிள்ளைகள் இருப்பார்கள்//

கவிதைக்கான தனிமொழியென தமிழில் கற்பிக்கப்பட்டு வந்ததை சிதிலப்படுத்தி நேரடியாக புலம்புகிற/ எடுத்துச்சொல்கிற தொனியில் அதிர வைக்கும் கற்பகம் யசோதர வன்முறைக்குள் பெண்ணாக இருத்தலின் பதிவுகளை கவிதையாக்குவதில் முதன்மையானவர். கலா அரசியல் சரிபிழைகளுக்குள் குறுகி நின்றுவிட கற்பகம் யசோதர எல்லாவற்றையும் புறக்கணித்து இயங்குகிறார். கழிவிரக்கத்தையும் கையாலாகாத உணர்வையும் இன்னும் என்னென்னவோ அந்தரமிக்க உணர்வுகளையும் தொற்றச்செய்து விடும் கவிதைகள் முதன்முறையாக ஈழத்துக் கவிதையில் யாசோதரவிடமிருந்து மட்டுமே கிடைக்கின்றன. யுத்தத்தை நிறுத்தியிருந்த போதுகவிதையில்;

//பதுக்கப்பட்டு

கடந்த வதைகளின் தடங் காட்ட

வன்மங் கொண்டு நிற்கிறது

யுத்த காலம்!

இப்படித்தான் தன் துணையிழந்து

இங்கே ஒரு பெட்டை நாய்

தனது குட்டிகளை வளர்க்க

உங்கள் விசர் தீர்க்க

தனது குறியை

இருக்கிறதும் கிழியவிட்டபோது

அத்

தீராக் கிடங்கில் விழுந்து

எழுந்த

ஒருத்தன் சுட்டான்

எக்களிப்புடன்.

வெட்கங் கெட்டவன்கள்

ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்

தம் பத்திரிக்கைகளில் அடித்தார்கள்:

தெரு நாய் கொலை!

ஆனால் அருகிருந்து கதறிய பிள்ளைகள் அழுதது

திசையறியா ஓர் எதிர்காலத்தின் மீதாக.

அவை அழுதன,அழுதன, தொடர்ந்து அழுதன!//

என்கிறார்.

knives & collapses i இல் யுத்தத்தினுள் பெண்ணாயிருத்தலை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டுகிறார்;

//அவளிடம் யாரும் சொன்னார் இல்லை

வெடுக் வெடுக்கென நடக்கும் கோழிபோல

உள்ளுணர்வுகளில் அனர்த்தம் வெடுக்கென நீட்ட

கைப்பிள்ளையோடு

ஒரு விசரியாய் ஓடினாள் அவள்

(அந்தரா அப்போ உனக்கு வயது நான்கு)

உணர்வுகள் கணமும் காயம் பீரிட்டு வெளிப்பட நிக்கும்

அவளிடம் சொல்ல

யாரும் துணிந்தாரில்லை

வயிற்றலடித்து அழுதாள் அம்மையின் அம்மா

ஐயோ.. என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே

என்ர பிள்ளைக்கு இப்பிடி ஆனதே

வன்னிக் காடே உனக்கு நினைவிருந்திருக்கும்

குடா நாட்டுக் கடல்களே உங்களுக்கு நினைவிருந்திருக்கும்

ஒரு கறிக்குதவா மரக்கறியாய்

உணர்ச்சியற்ற மரமாக

வழங்காதஉடலாக ஏனும்..ஏனும்

உயிருடன்கடவுளே

அவனைத் திருப்பித் தா

திருப்பித் தா

என அவள் கதறிய கதறலை//

கலா, கற்பகம் யசோதர ஆகியோருக்கு அடுத்து அனாரை சொல்ல முடியும். மேலும் சில இரத்தக் குறிப்புகள்என்ற அவரது கவிதை இந்த வைகையில் முக்கியமானது,

//சித்திரவதை முகாம்களின்

இரத்தக் கறைபடிந்திருக்கும் சுவர்களில்

மன்றாடும் மனிதாத்மாவின் உணர்வுகள்

தண்டனைகளின் உக்கிரத்தில்

தெறித்துச் சிதறியிருக்கின்றன

வன்மத்தின் இரத்த வாடை

வேட்டையின் இரத்த நெடி

வெறிபிடித்த தெருக்களில் உறையும் அதே இரத்தம்

கல்லறைகளில் கசிந்து காய்ந்திருக்கும் அதே இரத்தம்

சாவின் தடயமாய்

என்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது//

கலா, கற்பகம் யசோதர, அனார் போல இல்லவிடினும் கூட வன்முறைக்கெதிரான குரல் என்பது பிற பெண்களிடமும் உள்ளது தான். இப்படியான உதாரணங்களை ஒவ்வொருத்தரிடமிருந்தும் பெற்றுத் தர முடியும். போராளி கவியான அம்புலி கூட வன்முறைக்கெதிரான தனது உணர்வுகளை எழுதியிருக்கிறார். அம்புலியின் நான் எப்போதும் மரணிக்கவில்லைகவிதை இவ்வாறு தொடங்குகிறது.

//குண்டு மழைக்குளிப்பில்

குருதியுறைந்த வீதிகளில்

நிணவாடை கலந்த சுவாசிப்புகளில்

வெறுப்படைகிறேன்//

இந்த ஒரு அம்சமே ஈழத்துப் பெண் கவிதைகளுக்கு முக்கியத்துவத்தை வழங்குகிறது. இப்படியான அம்சங்கள் ஏற்படுத்தும் மனக்கிளர்வையும் முற்சாய்வையும் நீக்கி விட்டு இக்கவிதைகளை வாசிப்புச் செய்ய வேண்டும்.

இவர்கள் கவிஞர்கள் தான் என்பதில் எனக்கு மறுப்புக்களோ சந்தேகங்களோ இல்லை. அடையாளச்சிக்கல், பின் காலனித்துவம் என்றெல்லாம் புத்திபூர்வமான வாசிப்புகளை கோரும் கவிதைகள் ஆழியாளிடம் உண்டு.(துவிதம் தொகுப்பு) ஹனீபா சொன்னது போல கவிதையை அசையும் ஓவியச்சீலையென மாற்றும் திறமை பஹீமா ஜகானின் (ஒரு கடல் நீரூற்றி…) மொழிக்கு உண்டு. ஆயினும் தமது கவிதைக்குள் எந்தளவு தூரம் பெண்களாய்இவர்கள் இருக்கிறார்கள்?

பெண் மொழி பற்றி தமிழில் விவாதிப்போரில் முன்னணியில் இருக்கும் மாலதி மைத்ரி எழுதுவதைப் பாருங்கள்;

பெண் மொழி என்று கவிதையில் தனியாக அடையாளப்படுத்த சில தெளிவுகளும் அதற்கான கோட்பாடும் உருவாக வேண்டியிருக்கிறது. பெண் பாலுறுப்பை குறிக்கும் கவிதைகளை பயன்படுத்தினால் பெண் மொழி உருவாகி விடாது. பெண் மொழி என்பது அரசியல். பெண்ணிருப்பை பற்றியும் பெண் உடல் பற்றியும் சமூக குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள அவளுக்கெதிரான கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைக்கெதிராக குரலெழுப்புவதுதான் பெண்ணின் மாற்று அரசியல். ஆண்மைய மொழிக் கலாசாரத்தின் அகப்புற வெளி எல்லைகளை மீறி மொழிக்குள் இயங்குவதன் மூலம் பெண் மொழியை உருவாக்க முடியும். காலங்காலமாக சுமத்தப்பட்ட நிர்ப்பந்திக்கப்பட்ட கருத்தியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசியல் கவிதைகள் தமிழில் அதிகம் உருவாகும் போதுதான் பெண்மொழி/பெண்ணிய மொழி சாத்தியமாகும்‘ (விடுதலையை எழுதுதல். காலச்சுவடு ப.12)

தம்து எழுத்துக்குள் உருவாகவேண்டிய இந்த அரசியல் போர்க்குணத்தை, அதன் வரலாற்று நிர்ப்பந்தத்தை ஆழமாக பல ஈழப்பெண்கவிகள் உணரவில்லை. உணர்ந்த ஒரு சிலர் ஆண் எதிர்ப்பு பிரகடனங்கள், அறிவுரைகள், துறவு என முடங்குகிறார்கள். உணர்ந்தவர்களில் வேறு சிலர் அந்த அரசியலுக்கு முரணாகவும் இயங்குவதைக் காணலாம்.

தனது கவிதை வெளிப்பாட்டு மொழியிலும் உத்திகள் படிமங்களிலும் அபாரமாக வளர்ச்சியடைந்து வரும் அனாரின் நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்கவிதை தனக்கு உவப்பானவனை கவிதை வெளிக்குள் உருவாக்கிப் பார்க்க முனைந்து தோற்றுப் போய் காவியக் காத்திருப்பை மேற்கொள்கிறது. பெண்ணியா கண்ணீர்த்துளிகளுடன் எல்லாம் வெறுத்து சன்னியாசினியாகி விடுகிறார். இடைக்கிடை பிரகடனங்கள் செய்து கொள்வது அவரது ஸ்ரைல்.

சித்தி ரபீக்கா, ராசு ஆகியோர் பெண்ணாக அனுபவிப்பவற்றை அரசியல் பிரதிகளாக மாற்ற முனைவதேயில்லை. இவர்களது கவிதைகள் வெறுமனே புலம்பல்களாக எஞ்சிப்போய் விடுகின்றன. தில்லையின் கவிதைகள் இப்புலம்பலில் இருந்து சற்று மேல் நகர்வது போல் தோன்றினாலும் கூட திரும்பவும் யதார்த்த வட்டத்துள் வந்து வீழ்கிறது. அன்னா அஹ்மதோவாவின் கவிதையியல் பற்றி விரிவாக பேசும் ராசு பெண்ணிய அரசியலையே மறுக்கும் விதமாக ஆணை மட்டுமன்றி அவனது வன்முறையையும் சேர்த்தே உவந்தேற்றுப் பாடுகிறார்.

.கா;

நண்ப

என் ஆதர்ஸ நண்ப

அலையோடு அள்ளி

கதைகளை எறிந்த

உன் மௌனம்

உலக மொழிகளுள் சிறந்தது

பெண்ணியா ஆணை நோக்கிய விழைவைப் பாடுதலை சினிமாத்தனமான படிமங்களுடனும் சோகத்துடனும் செய்கிறார். எனினும் கூட பெண்ணிய பிரக்ஞையுடன் அவர் வெளியிடும் கவிதைப் பிரகடனங்களில் சில வலிமையாக இருப்பதை மறுக்கவியலாது;

//என் பயணம் ஆரம்பித்தாயிற்று

முடிவுகளற்ற இலக்கை நோக்கி

தனித்தாயினும் பயணிப்பதே இயன்றவரை

என் சிறகுகளின் மீது நீளும்

எல்லா கைகளுக்கெதிராகவும்

என் கனவுகளின் மீது

கொடூரங்களை வரைய நீளும்

எல்லா தூரிகைகளுக்கெதிராகவும்//

ஆனாலும் கூட இந்தவகைப் பிரகடனம் 80களுக்குரியது, காலவழக்கொழிந்தது என்பதை சொல்ல வேண்டியுள்ளது. பெண்ணியா காலவழக்கொழிந்த பிரகடனங்களை மீறி நகராமல் இருப்பது அவரது பலவீனம். இதை விட பெண்ணியாவை குறித்து இன்னுமொன்று; தானே நான்கு விதங்களில் விளிம்பாக்கப்பட்டவராய் இருந்து கொண்டு(முஸ்லிம்தமிழ்இஸ்லாமியபெண்) நான் உன்னதம், உங்களில் ஒருத்தியில்லைஎன்றெல்லாம் இறுமாப்பு கொள்ள இயலுமாகிறது;

//தோற்கடிக்கப் படலாமென உணர்ந்தும்

நான் போரிடுகின்றேன்

உங்களுள் ஒருத்தியாய் அல்ல

ஓர் உன்னதப் பிறவியாய்//

அறிவுஜீவித்தனமானவையாகவும் கோட்பாட்டு ரீதியான அணுகல் முறை கொண்டவையாகவும் பார்க்கப் படக்கூடிய கவிதைகளைத் தந்த ஆழியாளின் கவிதைகள் பெண்ணிய அரசியல் நோக்கில் பெறும் வீழ்ச்சி துயரமானது. பறத்தல் அதன் சுதந்திரம்தொகுப்பாளர்களான பெண்ணியர்களுடன் கூட சமரசத்தை விரும்பாத ஆழியாள் தனது ஒடுக்குமுறையாளனுடன் பண்ணிக் கொள்கிற சமரசம் சிரிப்பை வரவழைப்பது;

//நீயும் நானும்

வரையறைகளைக் கடக்கவேண்டும் நான்,

உன் விவேகத்தோடும்

நீ என் வீரியத்தோடும்

கடக்கவெண்டும்.

எனினும்

என் கருவறையை

நிறைப்பது உன் குறியல்ல

என்ற புரிதலோடு

வா!

ஒன்றாய்க் கடப்போம்.

நீ என் விவேகத்தோடும்

நான் உன் வீரியத்தோடும்// (தடைதாண்டிஉரத்துப்பேச தொகுப்பு)

அவனது ஒடுக்கு முறையை உணர்ந்து கொண்டதன் பின்போ என்னவோ சண்டை இடுகிறார்;

//இத்தனைக்குப் பின்னும் பெண் போகமா உமக்கு

போக்கிடமே இல்லையா அவளுக்கு?// (உரத்துப் பேச)

பின்னர் நிலையுணர்ந்து

//ஆளுமை கண்டால் ஆட்டக்காவடி என்பீர்

அஞ்சி ஒடுங்கிவிட்டால் அசல் குத்துவிளக்கு என்பீர் அந்த

வெள்ளிடிதான் உம்வாயில்

விரைந்தோடி வீழாதோ?// (உரத்துப் பேச)

என சபிக்கிறார். இவ்வளவு தான் உரத்துப் பேசதொகுப்பில் ஆழியாள் எனும் பெண் கவிஞர் செய்வது.

புலம்பலும் சபித்தலும் திட்டலும் பிறிதொரு சமயம் சமரசம் செய்தலுமாய் இவர்களது கவிதைப் பரப்பு நிரம்புகிறது. தொகுத்துப் பார்த்தால் இந்தப் பெண் கவிகள் சாடலும் ஊடலும் கூடலுமாய் கணவ்ன் காலடியில் கிடக்கும் தமிழ்ப் பெண்டாட்டி வகைமாதிரிகளே தவிர வேறில்லை.

இந்த மென்போக்கு பெண்கவிகளின் கிணற்றுத்தவளைத் தனத்தில் இருந்து வேறுபட்ட கவிதை வெளியை, தமக்கான அரசியலை உருவாக்க முனைவோராக ஒரு சிலரையே சொல்லலாம். கலா, கற்பகம் யசோதர மற்றும் மைதிலி ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடிய முன்னுதாரணங்கள்.

கலாவின் சர்ச்சைக்குள்ளான கோணேஸ்வரிகள்கவிதையை சிங்களXதமிழ் முரணைப் பின்புலமாகக் கொண்டு அணுகுவது தவிர்க்க முடியாதது தான் என்றாலும் ஆண்Xபெண் முரண்பாட்டில் சிக்கற்பாடான பெண்ணிய வெளிப்படுகையாகவும் கூட அதை வாசித்துப் பார்க்கலாம். அப்படிக் கொள்ளப்படுமாகில் அக்கவிதை ஏற்படுத்தும் அர்த்த விரிவுகள் எல்லையற்றவை. தனியே சிங்கள இன ஒடுக்குமுறைக்கான அரசியல் எதிர்ப்பு பிரதியாக மாத்திரமன்றி பெண்ணிய அரசியல் பிரதியாகவும் உள்ளது. இக்கவிதையில் கையாளப்படும் யோனி எனும் குறியீடு படைப்பின் அதி உச்ச சாத்தியப்பாட்டை புலப்படுத்தி நிற்பதாககூறுகிறார் சி.ரமேஷ் (காண்க. ஈழத்து நவீன கவிதையில் பெண் புனைவு. சி.ரமேஷ். தெரிதல்)

மைதிலியின் கவிதைப் பரப்புக்குள் ஆண் பலமான தாக்குதலுக்காளாகிறான். வெளிப்படையாகவே சொல்லப்போனால் மைதிலியின் கவிதைகள் ஒடுக்குமுறையாளனை Castrate செய்ய முயற்சிப்பவை. தனது நிலையை உணர்ந்து கொண்ட விதத்தை இவ்வாறு எழுதுகிறார் மைதிலி;

//குறும்பும் சிரிப்பும் கொண்டவளாய்

கனத்த மார்புகளுடையவளாய்

நேசிக்கப் படுகிறேன் நான்.//

இதற்கான எதிர்ப்புணர்வு ஆதங்கமிக்க கேள்வியாய் வெளிப்படுகிறது;

//யோனி முலைகளற்ற பெண்ணை

யாரும் காதல் கொள்வாரா?//

தன் ஒடுக்குமுறையாளனின் போலி வேஷங்களையும் ஒடுக்குமுறையின் நுண்ணிய உத்திகளையும் புரிந்து கொள்கிறார் மைதிலி. அவற்றை அவரால் இனங்கண்டு நிராகரிக்கவும் முடிகிறது;

//கலங்குகின்றன உன் விழிகள்

தலையை வருடுகின்றன கரங்கள்

இது ஒன்றும் விசேடமானதல்ல எனக்கு

நீ நடக்கிற பாதையில்

ஒரு மரத்தைக் கடக்கிறாய்

அவ்வளவேதான்//

வெகு இயல்பாக மிகவும் அழுத்தமாக தான் அவனைப் பொறுத்தவரை ஒரு பொருள் மாத்திரமே என்பதை சொல்கிறார்.

//அவன் தனது பேனாவால்

தாள்களில் கிறுக்குவது போல

தனக்குரிய சீப்பால்

தலையை அழுத்தி வாரிக் கொள்வது போல

தாடியைச் சீவுகிற சவரக் கத்தியை

கவனமாக கையாள்வதைப் போல

எல்லாம் முடிந்து

அமைதியாய் தூங்குகிறான் அருகே

என் இத்தனை நாளைய

காதலும் கனிவும்

இதந்தரு மென்னுணர்வுகளும்

பொங்கியெழுந்த குறியின் முன்

ஒழுகிக் கிடக்கிறது

கட்டிலின் கீழே//

இவ்வாறு ஆணை நிராகரித்து வரும் மைதிலி ஆண்குறியின் உன்னத Filler பிம்பத்தை உடைத்து castrate செய்து விடும் இடம் இது;

//கோபம்

உன் குறியை

சூம்ப வைத்து விடுகிறது// (பக்62. இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்)

மூன்றாவது மனிதன் இதழ்கள் சிலதிலும் பெரும்பாலும் இணையத்திலும் எழுதும் கற்பகம் யசோதர, போரின் அவலம், பெயர்தல், அகதியாக்கப்படல், வன்முறை, பெண்ணாயிருத்தல் என தனது கவிதை வெளியை உற்பவிக்கிறார். இவருடைய கவிதை மொழி தமிழுக்கு முற்றிலும் புதியது. வித்தியாசமான அதிர்வுகளை தரக்கூடிய நேரடி முன்நிலை விபரிப்பு பெரும்பாலான கவிதைகளில் பயன்படுத்தப் படுகிறது. பெண்ணிய அரசியல் மாத்திரமன்றி ஈழதேசப்போராட்டத்தையும் அதன் உடன்நிகழ்வுகளையும் பாடுபொருளாக்கும் யசோதர ஆண்களின் அரசியல்/சமூக/போராட்ட களங்களில் பெண்ணாக வலியற்றிருப்பதன் அசாத்தியங்களைப் பேசுகிறார். தாய்மை, நேசம், மென்னுணர்வுகள் பொங்கும் பெண்ணொருத்தி வன்முறைக்குள் இயக்கமடையும் விதங்களை எழுதும் வல்லமை யசோதரவுக்கு அபரிமிதமாக கைகூடி வந்திருக்கிறது.

//சைக்கிளை மிதித்துக் கொண்டு

பிரதேசத்தின் வயல் வெளிகளில்

இன்னுமொரு கொலைநாளில்

ஓர் இன்னுமொரு கொலைநாளில்

உல்லாசமான பாடல்களின் சீட்டியடிப்புகளின்றி

வதைமுகாம்கள்

இராணுவ முகாம்கள்

சோதனைச் சாவடிகள் ஊடு

முகமூடியாரோ

எதிர்ப்படும் நொடி வரையில்

இரண்டு சகாப்தங்களாய்

யாராலோ கொல்லப்படுவதற்காகவே

காலங்கள் சுழலும்

இத் தெருக்களில்

போய்க் கொண்டிருக்கிறேன்//

ஔவை போன்றவர்களின் போலித்தனங்கள் நீங்கி அதீத பின்நவீன யாதார்த்தப் பாங்கில் நகரும் வரிகள்.மொழியின் அர்த்தம், தொடர்ச்சி அற்றுப்போக ஒரு ஓப்பாரியைப் போல அல்லது இடப்பெயர்வின் நடுவே அந்தரமிக்க துக்க விசாரிப்பை போல ஒலிப்பவை இவை;

//எம் பால்யத்தின் ஓலைவீடு மழைக் காற்றில்

அடிஅடிப்பதை விடவும்,

மயிரிழையில் ஆடும் நம்பிக்கையில்

அச்சங்களிற்கு அப்பால்

எதை நோக்கிச் செல்கிறீர்கள்?

கோணமலையிருந்து புறப்பட்ட குடும்பமொன்று

இடைவழியில்

படகு மூழ்கி

தன் பிள்ளையைப் பறிகொடுத்த

தகப்பனின் கதறலோ

கரைகளை அடையவில்லை

கொந்தளித்த அலைகளுள் சிறு குரலோ எழும்பவில்லை

நட்சத்திரங்கள் கொட்டியில்லாத கரைகளில்

பாதங்கள் படிகிற போதினில்

(என் அன்பே, நண்பனே)

உமைத் தோய்ந்திருந்த குருதி

கழுவுப்பட்டு இருப்பதாக,

குரல்வளையைப் பிடித்திருந்த கொடும் கரங்கள்

இங்கும் நீட்டப்படா திருப்பதாக,

கிராமத்து தேவாலயங்களில் தஞ்சமடைந்த

பிள்ளைகளை

அவர்கள்கொன்று போட்ட குருதி

வற்றிப் போக முன்னார,

அரசியலேதுமற்ற ஓர் அப்பாவிக் குடிமகனும்

போகுது சவம்என

தட்டப்படும்உயிர் குறித்த கரிசனைகளுள்,

அவனும் இவனும் போவ வர சுட்டுச் சுட்டுப்

போனவர்கள் விட்டுச் சென்ற கண்ணீர்…//

என்னதான் அன்பு பாசம் நேசம் தாய்மை என்று சொன்னாலும் ஆண் உலகின் வன்முறை மீது யசோதர அளவு கடந்த வெறுப்பை உமிழ்கிறார். ஆண் அரசியல் தான் அனைவரையும் ஆட்சி செய்கிறது என்பது தொடர்பில் யசோதர தெளிவாயிருக்கிறார். எழுதும் பெண்களுக்கு முதலாவது தணிக்கையாளனாய் இருக்கும் அறப்பொறுப்புணர்வில் இருந்து விடுபட்டு ஆண் அரசியல் மீது கீழ்வரும் விமர்சன வரிகளை எழுதுகிறார்;

//உன் தேச நலனிற்காய் நீ பிற இனத்தவரை ஓள

அனுப்பப்பட்டிருக்கிறாய்//

//யோனிகளைப் பிளப்பதற்கான பத்திரத்துடன்

ஆக்கிரமித்த நிலப் பெண்களின் காதலர்களின்

குறிகளை வெட்டும் அனுமதியுடன்

தவிரவும் சித்ரவதைக் கூடங்களிற்கான திறப்புகளுடன்;

துப்பறியும் பொலிஸ்காரர் கட்டை அவிழ்த்து

சாவை முகர்ந்துவர விடப் படும்

நாயினது துரிதத்துடன்

பார், பார் நகரின் அரசியல் தலைவர் அனுப்பிய

குண்டர் கொட்டாந் தடியுடன்

எதற்கும் தயாராக! ஜீப் ஜீப்பாய் தொங்கிக் கொண்டு//

//வெட்கங் கெட்டவன்கள்

ஆண் குறியைக் பிடித்துத் தொடர்ச்சியாய்

தம் பத்திரிக்கைகளில் அடித்தார்கள்//

தனது நிலை தொடர்பான புரிதலுடன் ஆத்திரத்தை முன்வைத்து தனது அன்பு, நேசம், காதல் காமம் எல்லாம் வீணாய்ப்போய் விட்டதான ஆத்திரத்துடன் மாற்றுப்பாலியல் (சுயபுணர்வு, லெஸ்பியன்) சார்ந்து நகரும் உந்துதலும் யசோதர கவிதைகளில் உண்டு;

//தெருவோரம் நின்று

சிறிதளவு அன்பிற்காய்

மண்டியிட்டிருந்தவள் நான்.

இன்றோ

நான் யார் யாரோ

நினைப்பிற்கும் ஆடப் பிறக்காத்

தாடகை சிறாம்பி!

கடவுளின் ஒரு பகுதி;

அல்லது நானே கடவுள்.

இத் தற் பிரேமங்கள் குறித்து

எதுவும் பேசாதே

என்றைக்கோ

எனக்கான முத்தங்களைக்

காற்று விழுங்கிவிட்டது

என்னை என்னால்(க்) கை

விட முடியாது முடியவில்லை//

//தலை தேய்த்துத் தோயவிட்ட தோழி

நாம் பேச ஒன்றுமற்றுப் போய்விட்டது

(தோழியைப் புணரு)

பெருஞ்சாலைகளில் துணை வருகிற ரத்த உறவானவளிடம்

உதட்டின் சுவை உணரக் கேட்கத் தயக்கம்

(அவளைப்… //

கற்பகம் யசோதரவின் கவிதைகளில் சில வலிமையான Allusionகளைக் கொண்டவை. புத்திபூர்வமான வாசிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியவை. கற்பகம்.யசோதரவின் Knives & Collapses ii கவிதையை வாசிப்பதற்கு முன்னர் ஒருவர் Frida Khaloவின் Broken Column ஓவியத்துடனும் ஆன் செக்ஸ்டனுடனும் தன்னை பரிச்சயப்படுத்திக் கொள்வதவசியம்.

மேற்குறித்த மூன்று பெண்கவிகளிடமும் தென்படும் வலிமையான அரசியலையும் கவித்துவத்தையும் சாதிக்கக் கூடியவர்கள் என்று சிலரைக் கூற முடியும். இருண்மை மிக்க அலூஷன்களுடன் கவிதையெழுதும் பிரதீபா, கவிதையியல் தொடர்பில் நிறைந்த அறிவுடனிருக்கும் ஆழியாள், பூடகமானதும் வலிமையானதுமான படிமங்கள் நிரம்பிய கவிதைகளைத் தரும் தான்யா, அன்றாட வாழ்வில் இருந்து சாதாரண படிமங்களை கோர்ப்பதனூடாக வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தரும் ஆகர்ஷியா, தனது முதலாவது தொகுப்பின் பிரகடன தொனியில் இருந்து விடுபட்டு முன்நகரும் அனார், புணர்வின் அதிருப்தி/ஜமேய்க்க காதலன் என தடைகளற்றுப் பாடும் ரஞ்சனி, மனோரதியமாகவெனினும் வெளிப்படையாக எழுதும் நிவேதா, என்போர் நம்பிக்கையளிக்கிறார்கள்.

பஹீமா ஜகான், தில்லை, ஔவை, பெண்ணியா, மலரா, சித்தி ரபீக்கா, ராசு, என நீளும் இதர பெண் கவிகள், தமது அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளுக்கூடாகவும் கவிதை/எழுத்து என இயங்குவதற்காய் முக்கியத்துவமளிக்கப் பட வேண்டியவர்கள் தான் என்ற போதும் விமர்சிக்கப் பட வேண்டியவர்களே. இவர்களது கவிதைகள் சராசரி வாசிப்பாளருக்கு அருட்டுணர்வையும் பாதிப்பையும் தருகிற போதும் எழுத்துபெண்ணிடம் கோரி நிற்கிற விடயங்களை பூர்த்தி செய்வதாயில்லை.

ஆணாதிக்கத்திலிருந்து மட்டுமன்றி தாமே உருவாக்கி வைத்திருக்கும் வரம்புகள், கட்டுகள், சினிமாத்தனங்களிலிருந்து விடுபடுகிற போது இவர்கள் செல்லக்கூடிய தூரம் அதிகம்.

கவிதை வெளி விரிந்து பரந்து கொண்டேயிருக்கிறது. அதற்குள் பெண்ணின் தனித்துவமிக்க குரலை செப்பமாக ஒலிக்கச்செய்பவர்களுக்காக இன்னமும் காத்திருக்க வேண்டித்தான் இருக்கிறது.

ஆழியாளின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து…

ஈழத்துப் பெண் மொழியின் துயர முரண்:

ஆழியாளின் இரண்டு கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து

*

ஆழியாளில் பிழைபிடிப்பதோ அல்லது அவரை கடாசியெறிவதோ அல்ல இக்குறிப்பின் நோக்கம். அறிவுபூர்வமான அலசலும் தேர்ந்த கவிதைக்கட்டமைப்பும் இவை தொடர்பான அறிதலும் உள்ள ஆழியாள் தனது பிரதிக்குள் தானே செய்து கொள்கிற சில உடன்பாடற்ற அம்சங்களை சுட்டுவதனூடாக பெண்ணிய அரசியலுக்கு வெளியே அவரது பிரதிகளின் இருப்பை நிறுவுதல் தான் எனது நோக்கம்.

*

ஈழத்துக் கவிதைகள், கவிஞர்கள் என்று வருகையில் ஆழியாளுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை எளிதில் மறுக்கவியலாது. புலம்பெயர்தல், அடையாளச்சிக்கல், அந்நியக்கலாசாரத் தகவமைப்பு தொடர்பில் வலிமையான கவிதைகளை எழுதியவர் அவர். ஓர் உயிரி மீது திணிக்கப்படும் அடையாளங்களின் பெருக்கத்தால் ஏற்படும் சுமையை எள்ளலுடன் அதே சமயம் இயல்பான மொழியில் கூறும் அடையாளம்கவிதை ஒன்றே அவரது பெயரைச் சொல்ல போதுமானது.

அவுஸ்திரேலிய வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்வதில் இருந்த சிக்கல்களை பேசும் எட்ட ஒரு தோட்டம்கவிதை வார்த்தைத் தேர்விலும் ஒழுங்கமைப்பிலும் நுட்பத்தை புலப்படுத்துகிறது.

//வழக்கமான ஒய்யாரத்துடன்

வேர் விட்ட களைகளின் பெயர்கள்

எனக்குத் தெரிந்திருக்கவில்லை//

என தனது அந்நியமாதலை எழுதும் ஆழியாளின் இக்கவிதையையும், அழித்தொழிப்புச் செய்யப்பட்ட அவுஸ்திரேலிய தொல்குடிகள் பற்றிய கவிதைகளையும் பின்கொலனித்துவ வாசிப்பு செய்து கொள்ள முடியும்.

மேற்குறித்த கவிதைப்பண்புகள், மதுபாஷினி எனும் பெயரில் கவிதையியல்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் என்று பார்த்தால் ஆழியாள் தவிர்க்க முடியாத முக்கியமான நபர் என்பது புலப்படும். நான் சொல்லவருவது ஆழியாள் சிறந்த கவிஞர் மட்டுமே என்பதைத்தான். ஆழியாளின் கவிதைப் பரப்பு கவிஞையாகக் கூட அவரை அடையாளப்படுத்தவில்லை.

துவிதம் தொகுப்புக்கு தனது வாசிப்பை செய்த மதுசூதனன் கோரா கப்லானை மேற்கோளிடுகிறார்; ‘காரண காரிய பகுத்தறிவுத் தர்க்கங்கள் என்ற முறையில் பெண்ணை மடக்கிப் போடும் ஆணாதிக்க மொழியை தகர்த்தல்‘. ஆழியாளின் எந்தக் கவிதை இந்தக் கைங்கர்யத்தைப் பண்ணுகிறது என்று யாராவது சொன்னால் நலம்.

ஆழியாளின் பகிர்ந்து கொள்ளல் மூடப்பட்டதாக இல்லைஎன்கிறார் மதுசூதனன். வாசகருடன் கவிதையை தொடர்புபடுத்தும் இழைகள் தெளிவாகஇருப்பதால் மதுசூதனன் இவ்வாறு சொல்கிறார் என நினைக்கிறேன். கவிதைக்குள் ஆழியாளின் பகிர்ந்து கொள்ளல் இறுக மூடப்பட்ட இடங்களை தெளிவாக இனங்காட்ட முடியும்.

உரத்துப் பேசதொகுதியில் இருந்த கவிதை சொல் தொனி துவிதத்தில்முதிர்ச்சியை எட்டியிருப்பது உண்மைதான். உரத்துப் பேசதொகுப்பின் வெற்றுப் பிரகடனங்களும் துவிதம்தொகுதியில் இல்லை. உரத்துப் பேசவில் இருந்த தன்னைத் தாண்ட முடியாத துக்கம் துவிதம்இல் கவித்துவ மோடிப்படுத்தலுடன் (Ornate) வெளிப்படுகிறது.

//சிதறும் அதிர்வுத் துகள்கள்

நரம்பெங்கும் பரவிப் பெருக்கெடுக்க

உடலசைத்து ஆடவும்

அபிநயிக்கவும் முயல்கிறேன் எனினும்

காலுறைகளைத் தாண்டி அசைவுகள்

வெளிப்பரவாது போயின மரத்தோ ஒழிந்தோ//

எத்தனை காலத்துக்கு இப்படியே வெவ்வேறு தொனிகளில் புலம்பியவாறிருப்பது? ஆழியாள் காலுறைகளை கழட்டி எறியும் வரை அவரது கவிதைகள் உடலசைத்து ஆட வழிகளில்லை என்பதை ஒரு தற்காலிக கவனிப்பாக சொல்லிக்கொண்டு திரு.மதுசூதனனிடம் வரலாம்;

இறுகிய கழுத்துப் பட்டிக் காரர்களுக்கு ஆழியாள் வழங்கும் இடம் குறுகியது தான்என்கிறார் மதுசூதனன். உண்மைதான்.. இறுகிய கழுத்துப் பட்டிக்காரி எப்படி இன்னொருத்தருக்கு இடம் வழங்குதல் சாத்தியம்?

*_*

ஆழியாளின் இதுவரை வெளிவந்த தொகுப்புகள்;

உரத்துப் பேச

வெளியீடு மறு

(noolaham.netஇல் கிடைக்கிறது)

துவிதம்

வெளியீடு மறு

பிரதிகள் பெற;

Maru

Mathubashini.

20 Dulverton Street

Amaroo, Canberra ACT 2914

Australia.

aaziyaal@hotmail.com

எழுதப்படாத வலி மற்றும் பகிரப்படாத கனவுகள் பற்றி…

[எழுதியது: 2006 வீரகேசரியில் வெளிவந்தது.]

…சுணைக்கிது

(சிறுகதைத் தொகுப்பு) – நிருபா


தமிழ் நவீனத்துவம் மிகவும் அச்சமூட்டக்கூடியது. குரலற்றுப் போனவர்களின் எண்ணிக்கை நவீனத்துவப் பரப்பில் அதிகம்.நவீனத்துவம் தனது நுண்ணிய வன்முறை மூலம் சிதறடித்த இருப்புக்களும் அடையாளங்களும் எண்ணற்றவை.
பீதிக்கனவுத் தன்மை மிக்க இச் சூழலில் இருந்து தமிழ் இலக்கியப் பரப்பு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதை ஸ்தூலமாகவே உணர முடிகிறது.


இதுவரை அடையாளங்கள் இல்லாது இருக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டவர்களும் குரல்வளை நெரிக்கப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து தமது அரசியல் ரீதியான இருப்பை உறுதி செய்து வருவதை நாமறிவோம்.
தலித் அரசியல் பெண்ணியம் பாஸிச எதிர்ப்பு பற்றிய கதையாடல்கள் பின் நவீனத்துவப் புலத்தில் உக்கிரமாக நிகழ்த்தப்பட்டாலும் பின் நவீனத்துவம் நாசூக்காக ஒதுக்கும் விடயங்களும் உண்டு. (விதிவிலக்கு பிரேம்-ரமேஷ்) கலகத்தன்மை மிக்க சமபாலுறவு, முறைதகாப் பாலுறவு போன்ற விடயங்கள் மிக நாசூக்காக ஒதுக்கப் படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவ்வாறான கலகத் தன்மைகள் ஏதுமற்ற சிறுவர் உலகு குறித்த கதையாடல்கள் நிகழ்த்தப்படாதிருப்பது தந்தை வழிச் சமூகத்தின் இன்னொரு வெளிப்பாடு தானோ எனச் சந்தேகிக்க வைக்கிறது. தந்தை வழிச் சமூகம் பெண்கள் மீது செலுத்தும் வன்முறையினைப் போன்றதே சிறுவர்கள் மீது மரபின் அங்கீகரிப்புடன் பிரயோகிக்கப்படும் வன்முறை.இந்த நிலை குறித்த விமர்சனம் எழாத ஒரு சூழலை ஆரோக்கியமானதென என்னால் எழுதிச் செல்ல முடியாது.


இத்தகைய சூழலில்வைத்து நிருபாவின் பிரதியை உள்வாங்குகையில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை பிரக்ஞைக்குள்ளாக்கியபடி மாத்திரமே வாசிப்பை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.இந்த வாசிப்பு நகர்த்தல் ஒருவகையில் தவிர்க்க முடியாததும் கூட.


“…….சுணைக்கிது” என்ற தலைப்பு சிறுவர்களுக்கு ஏற்படும் சூழல் சார்ந்த ஒவ்வாமையை ஞாபகமூட்டுகிறது.தொகுப்பின் உள்ளடக்கத்துக்கு மிகப் பொருத்தமான ஒரு தலைப்பு.
முதலாவது சிறுகதையை வாசிக்கத் தொடங்கியதுமே நம்மை ஆச்சரியப்படுத்தும் விடயம் அதில் கையாளப்பட்டிருக்கும் வட்டார வழக்கு. அச்சு அசலான பிசிறுகள் ஏதுமற்ற வட்டாரத்தமிழ் பதின்ம வயதுகளில் புலம்பெயர்ந்த நிருபாவுக்குச் சாத்தியமாகியிருப்பது எப்படி?
சிறுவர் மீதான வன்முறையை வலியுடன் அதன் கசப்பு மிக்க உண்மைகளுடன் ஆவணப்படுத்துகிறது முதலாவது சிறுகதை.மலையகத்தொழிலாளர் மீதான வெறுப்பும் உயர்சாதியினரின் மேலாதிக்க வாதமும் ‘தோட்டக்காட்டான்’ என்ற பதப்பிரயோகம் மூலம் சொல்லப்படுகிறது. தோட்டக்காடு தேவையற்றோரை தள்ளி விடும் இடமாக, அருவருப்புக்குரிய இடமாக நிருபாவின் புனைவு வெளியில் வந்து போகிறது.”போட்டுவாறன்” என்கிற இரண்டாவது சிறுகதை சிறுவர்கள் மீது உளவியல் வன்முறை அறிதலற்றுப் பிரயோகிக்கப்படுவதை கவனப்படுத்துகிறது. ‘….சுணைக்கிது’ சிறுகதை சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை அதன் மூலம் ஏற்படும் வலியை நாசூக்காகக் கூறிச் செல்கிறது.
‘அடிஅடியாய்’ ‘முதல்நாள்’ ‘மழை ஏன் வந்தது” போன்ற சிறுகதைகள் சிறுவர் நல நிலை நோக்கிலான வாசிப்பிற்கும் பெண்ணியவாத வாசிப்பிற்கும் இடமளிப்பவை.சிறுவர்களது அக உலகிற்கும் யதார்த்த உலகிற்குமிடையே நிலவும் முரண்களும் மோதுகைகளும் சிறுகதைகளாகப் பரிணமித்துள்ளதை உணரமுடிகிறது.
‘கடுதாசிப் பூ’ சிறுகதை சிறுபிள்ளைத்தனமான முதற்காதலை(?!) அதன் அர்த்தமின்மையுடன் அதன் பரிசுத்தத்துடன் எழுதிச் செல்கிறது.முதற்காதலின் வலியை சொல்கிறது ‘காதல்’ என்ற சிறுகதை. தொகுப்பினுள் ஒரு கிராமமே அதன் அத்தனை இயல்புகளுடனும் இயங்கிக் கொண்டிருப்பதான உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.


தொகுப்பின் மிகக் கனதியான அம்சம் ஆண் உயர்சாதி மையவாதங்களைக் கொண்ட இந்துத்வக் கலாச்சாரம் அங்கீகரிக்கும் வன்முறை மற்றும் அதன் போலி மதிப்பீடுகள் போன்றவற்றுக்கும் குழந்தைகளின் உலகிற்குமிடையேயான முரண்கள் கையாளப்பட்டிருப்பதுதான்.’அடிஅடியாய்’ கதையில் தாலியைக் கழட்டி எறிந்த குஞ்சியம்மா திரும்பவும் தாலி அணிந்திருப்பதைப் பார்க்கும் சிறுமி குழம்புகிறாள்.பருவமடைந்த சிறுமி ஏன் எட்டுக்கோடு விளையாடக்கூடாது எனக் கேட்கிறாள்.
பருவமடைதலின் பின் சிறுமிகளின் குழந்தமை மூர்க்கத்தனமாக இந்துத்வப் பண்பாட்டால் பறிக்கப்படுவதை ‘முதல்நாள்’ சிறுகதை சொல்கிறது. ‘நீ தண்ணி அள்ளக் கூடாதெல்லே, துடக்கெல்லே, இனிமேல் விளையாடக்கூடாது!.” என்று சொல்லியவாறேயிருக்கிறார்கள்.சிறுமி கேட்கிறாள் ‘எல்லாரும் ஏன் ஒரு மாதிரிப் பாக்கினம்? ஏன் இப்பிடிப் பாக்கினம்”. ஒரு பெண்ணாக ஒரு இந்து ஆணுக்கு ஏற்ற பெண்ணாக அவள் வடிவமைக்கப்படுவதை ஆவணப்படுத்தும் இச் சிறுகதை மிக முக்கியமான ஒன்று.


‘மாய மனிதன்’ சிறுகதை ஒரு சிறுமியால் மாத்திரமே எழுதப்படக் கூடிய ஒன்று. ஒவ்வொரு வரியும் யதார்த்தம் யதார்த்தம் என்று நகர்கிறது.விவரணைகளின் துல்லியத்தன்மை சிறுவர்கலின் உலகினுள் இலகுவாக இழுத்து விடுகிறது.
வட்டார வழக்குப்பிரயோகம் மற்றும் அதன் லாவகம் தவிர்ந்து நிருபாவின் சிறுகதைகள் நம்மை ஆச்சரியப்படுத்துவது அவற்றின் விவரணைத் துல்லியத்தின் காரணமாகத்தான். தனது தாய்மண் பற்றிய நினைவுகள் நிருபாவிடம் பசுமையானதாகவே காணப்படுவதை இவை காட்டுகின்றன.


கோபம், நேசம் போடுதல் , விசுக்கோத்து கைமாறுதல் அது இது என்று குழந்தமையின் சுவடுகள் நிருபாவின் தொகுப்பில் நிறையவே உண்டு.சிறுவர்களின் மனோநிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் – அதன் தர்க்கமின்மையை வெகு இயல்பாகச் சொல்லிச் செல்லும் வரிகள் தொகுப்பின் மிகப் பெரிய பலம்.பல்யத்தின் அறியாமை, பயம் என அனைத்து அம்சங்கலுடனும் அவை பதிவு செய்யப்படுகிண்றன.’தோட்டக்காட்டிலயிருந்து தான் உன்னை எடுத்தனாங்கள்’ என்று பகடியாகப் பெற்றார் சொல்வதைக் கேட்டு தனது சொந்த்த் தாய் தகப்பனைத் தேடி தோட்டக்காட்டிற்குச் செல்லும் ஒரு பிள்ளையின் மனனிலையை பின்வருமாறு நிருபா எழுதுகிறார். “ஒரு பாய். படுக்கத் தேவை தானே. ஒரு முட்டை. எனக்கு முட்டையெண்டா விருப்பம். பொரிச்ச முட்டை.ஒரு பாதித் துவாய்.பவுடர்ப் பேணி. நான் பவுடர்ப் பேணி சேர்க்கிறனான்.சிவப்பு ரோசாப்பூ படம் போட்ட தட்டப் பேணிப் பவுடர்.நல்ல வாசம். ஒண்டுக்குள்ள தான் கொஞ்சப் பவுடர் இருக்கு.காணும்.எடுத்து வைச்சன்”


நிருபாவிடம் இருக்கும் பால்யத்தின் பசுமையான நினைவுகளுக்கு மற்றுமொரு சான்று , அர்த்தமின்மையில் நகரும் சிறுபிள்ளைத்தனமான வார்த்தை விளையாட்டுக்கள்:
‘என்ன அன்னம் ? சோத்தன்னம்.
என்ன சோறு ? பழஞ் சோறு.
என்ன பழம்? வாழைப் பழம்.
என்ன வாழை ? திரி வாழை.
——– ———–? ————.
. ……. என்றும்
என்ன வெள்ளை? மா வெள்ளை.
என்ன மா? ஸ்ரீமா. என்றும்
கோவங் கோவங் கோவம்.கண்ணக் கட்டிக் கோவம்.செத்தாலும் பாவம்.நடுச் சாமத்தில பாம்பு வந்து கொத்தும்; என்றும்
நீளும் வரிகளால் நிரம்பியிருக்கின்றன சிறுகதைகள்.


கதைகள் நிகழும் சிறுவர்களின் உலகில் இருந்து நான் நகர்ந்து மூன்று வருடங்கள் தான் நகர்ந்திருக்கிறது. யதார்த்த உலகு குறித்த பிரக்ஞையும் அப் பிரக்ஞையுடன் என் அக உலகு எதிகொள்ளும் தீராத முரண்களும் பால்யம் பற்றிய என் நினைவுத் தளத்தை ஏறக்குறைய அழித்துவிட்டிருக்கின்றன.தொடர்ச்சியான வாசிப்புக்களின் மூலம் நான் பெற்றது நினைவுத் துண்டிப்புக்களேயன்றி வேறல்ல என்பதை நிருபாவின் பிரதியின் முன் ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கும் நிலையில்: புகலிடச் சூழலின் குரூர யதார்த்தம், கலாச்சார மொழி ரீதியான நெருக்கடிகள் சிக்கல்களுக்கிடையில் நிருபா தன் நினைவுத் தளத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


ஒரு சிறுகதையாசிரியராக நிருபா கொண்டிருக்கும் பலவீனங்களை கவனப் படுத்த வேண்டியுள்ளது.இத் தொகுப்பின் நோக்கும் அதன் இலக்கும் உன்னதமானவையாகவே இருந்த போதும் இதன் சூழல் சார் முக்கியத்துவம் மிகப் பெரியதாகவே உள்ள போதும் பலவீனங்களைக் குறித்து நிருபா விழிப்புடனிருப்பது மிக அவசியம்.


சிறுகதைத் தொகுப்பாக வாசிப்பதற்கும் அத்தியாயங்கள் இடம் மாறி அடுக்கப் பட்ட ஒரு நாவலாக வாசிப்பதற்கும் இடமளிக்கிறது இத் தொகுதி. Bildungsroman வகையின் உத்திகள் வீச்சுடன் கையாளப்பட்டிருந்தால் மிக முக்கியமான ஒரு நாவல் நமக்குக் கிடைத்திருக்கும்.


இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் இருமை எதிர்வுகளாலேயே வளர்த்துச் செல்லப் படுகின்றன.நாயகப் பண்பு X எதிர் நாயக வில்லத்தனம் என்கிற எதிர்வு ஒவ்வொரு கதையினுள்ளும் தொழிற்பட்டவாறேயிருக்கிறது.நிருபா தன் நாயக நாயகிகளுக்காக உருக்கமான வாக்குமூலங்களை எழுதுகிறார், பல தருணங்களில் வாசகனிடம் கோள் மூட்டுகிறார். ஆனால் மற்றவர்கள் (அல்லது வில்லன்கள்) குறித்து நிருபா அலட்டி மெனக்கடுவதில்லை. அவர்களுக்கு இருந்திருக்கக் கூடிய நியாயங்கள் நிருபாவின் புனைவு வெளிக்குள் பதிவு செய்யப் படுவதில்லை.எதார்த்தவாத எழுத்து முறையை கதைகூறலுக்கென தெரிவு செய்துள்ள நிருபா அதன் வன்முறை குறித்து விழிப்புடனிருந்திருக்க வேண்டும்.ஷோபா சக்தியின் எதார்த்தவாத சிறுகதைகள் சில மற்றமைகளின் இருப்புக் குறித்த பிரக்ஞையுடன் எழுதப்படுவதை இங்கு நினைவு கூரலாம்.சல்மா கூட தன் எதார்த்த வாத நாவலில் பின்நவீனத்துவ ஜனநாயகப் பண்புகளை கையாண்டிருந்தார்.
ஆனால் நிருபாவின் சிறுகதைகள் கோரி நிற்கும் மாற்றங்கள் தெளிவானவை.அனைத்துமே வன்முறையை எதித்தவாறிருப்பவை.தமது மொழியில் தமது கதையைச் சொல்லியவாறிருப்பவை. பலவீனங்களோடு பார்த்தால்க் கூட நிருபாவின் “….சுணைக்கிது மிக முக்கியமான பிரதியாக தன்னை முன்நிறுத்திக் கொள்கிறது.

மேற்குலகின் புதிய மனச்சாட்சி மி்ஷெல் வெல்பெக்

மேற்குலக நவீனத்துவத்தின் முக்கிய மனச்சாட்சிகளாக காஃப்கா, காம்யு, ஆர்த்தோ மூவரையும் குறிப்பிடுவது வழக்கம். இவர்களது பிரதிகள் சென்ற நூற்றாண்டின் மாபெரும் தத்துவார்த்தச் சிக்கல்களாக எதிர்கொள்ளப்பட்டவை. பல சிந்தனைப்பள்ளிகளின் தொடக்கத்துக்கும் சமூக இயக்கத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கும் பங்களித்த பிரதிகள் இவை.

காம்யூவிற்குப் பிறகு இம்மரபில் தோன்றியவரென மி்ஷெல் வெல்பெக்கை அடையாளம் காணப்படுகிறார். ஆனால் இம்மரபின் `தொடர்ச்சி`யென -அம்மரபின் பண்புகளைக் காவுகிறவராய்- வெல்பெக்கை இனங்காண முடியவில்லை. வெல்பெக்கின் வேர் காஃப்காவிடத்திலோ, காம்யூவிடத்திலோ இல்லை; மாறாக, ஃபெர்டினாண்ட் செலைன், மி்ஷெல் ஃபூக்கோ போன்றோரிடமிருக்கிறது என்று நினைக்கிறேன். கலகத்தன்மையிலும் சரி புனைவுத் தளத்திலும் சரி தன்னை ஓர் பாய்ச்சலாக நிறுவிக்கொண்டிருக்கும் இவரது பாய்ச்சல் முன்னோக்கியதா இல்லைப் பின்னோக்கியதா என்பதே தற்போது அதிகளவில் விவாதிக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. வெல்பெக்கின் புனைவுக்குப் புறம்பான செயற்பாடுகளும் புனைவுகளின் கலகத்தன்மையும் அவரை செலைன், அந்ரே ழ்ஜித், ழீன் ஜெனே போன்றோருடன் ஒப்புநோக்க வைக்கின்றன. `தேங்கிப்போன கவனங்களை உலுக்குவதே என் நோக்கம்` எனக்கூறிய ழ்ஜித்துடன் மிகவும் நெருங்கிப் போகக்கூடியவர் வெல்பெக். ஃபிரான்ஸின் புத்திஜீவிகளும் கலைஞர்களும் அதிரடியானவர்களாகவோ அதிர்ச்சியூட்டுபவர்களாகவோ தான் இருந்து வந்துள்ளார்கள். மார்க்கி டி சேட், பெர்டினாண்ட் செலைன், ழீன் ஜெனே இப்போது வெல்பெக். சேட் மறைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவரது எழுத்துக்கள் மீதான சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது. இத்தகைய கலகத்தன்மையுடன் கூடிய அறிவுமரபின் தீவிரம் அமெரிக்கர்களிடமோ இதர ஐரோப்பியர்களிடமோ காணக்கிடைப்பதில்லை.

சமகால பிரெஞ்சு-அய்ரோப்பிய இலக்கியத்தின் முக்கிய நபரான மி்ஷெல் வெல்பெக் (Michel Houellebecq – pronounced wellbec) இதுவரை நான்கு நாவல்களை எழுதியுள்ளார். வெல்பெக்கினுடைய எழுத்துமுறை முற்றிலும் சலிப்பூட்டக்கூடிய வாசகனை அவமதிப்புக்குள்ளாக்கக் கூடிய ஒன்று. சமகால ஆங்கில ஐரோப்பிய இலக்கிய மரபிற்கு எதிர் மரபொன்றைத் தாபிக்க முயலும் பிரதிகளென இவற்றைக்கொள்ள முடியும். அமெரிக்க-ஆங்கில புத்திஜீவி நாவல்களுக்கு – முக்கியமான ஏதோ ஒன்றைச்சொல்கிற பாவனையில் புரியாத பூசிமெழுகிய வார்த்தைகளை இட்டு நிரப்பும் நாவல்களுக்கு எதிராக இயங்கும் நாவல்கள் இவருடையவை. ஆடம்பரமற்ற வரண்ட மொழி, மிக மிகப்பழைய கதைநகர்த்து முறை போன்றவற்றைக் கொண்டிருக்கும் நாவல்கள் பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் சம்பாதிக்க முடிகிறதென்றால் அப்பிரதிகள் வேறு வகைகளில் முக்கியமாகிறது என்று அர்த்தம்.

வெல்பெக்கின் முதல் நாவலான ‘Whatever’ 1994 இல் வெளி வந்தது. பரவலான கவன ஈர்ப்பைச் செய்ய முடியாது போன இந்த நாவலுக்குப் பின் 1998இல் The Elementary Particles ஐ பிரெஞ்சில் வெளியிடுகிறார். 60களில் தாராண்மைவாதத்தின் உடன்நிகழ்வுகளான தாராளவாதப்பெண்ணியம், தாராளவாதத்தனிமனிதவாதம், பொகீமியனிசம் என்பவற்றின் இருண்ட பக்கங்களை கருணையற்ற மொழியில் விமர்சனம் செய்கிறது நாவல். மிக ஆழமான சமூக விமர்சனமும் தத்துவார்த்தமாக்கலும் நிறைந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சலிப்பூட்டக்கூடிய மொழியும் குரூர நகைச்சுவையும் எரிச்சலூட்டக்கூடிய வகையில் முன்-திட்டமிடப்பட்டிருக்கிறது.

The elementary particles இரு சகோதரர்களை மையப்படுத்துகிறது. ஒருவன் Michel Djerzinsky – விஞ்ஞானி. மற்றையவன் Bruno – மனஞ் சிக்கலுற்ற ஆசிரியன். இருவருமே வேறுவேறு தந்தையர்களுக்குப் பிறந்த ஒரு தாய் பிள்ளைகள். 60களில் ஹிப்பி வாழ்வின் ஈர்ப்பில் தாய் இவர்களை வயதான பாட்டியுடன் விட்டுச்செல்கிறாள் – அமைதியையும் தன்னையும் ஹிப்பி வாழ்வில் – கலிபோர்னியாவின் கொம்யூன் ஒன்றில் கண்டுகொள்கிறாள், வேறு வேறு தந்தைகளுக்குப் பிறந்த மி்ஷேலும் ப்ரூனோவும் இதைத் தொடர்ந்து பேரன் பேர்த்திகளிடம் வளர்கின்றனர். ப்ரூனோவின் குழந்தைப் பருவம் மிகக்கசப்பானதொன்றாக அமைந்துவிடுகிறது. முகத்தில் சுருக்கம் விழுந்த பாட்டி பாடசாலைக்கு வந்து தன்னைக் கூட்டிச் செல்வதையிட்டு மிகுந்த அருவருப்படைகிறான் ப்ரூனோ. இவர்கள் இருவரும் சிதைந்த சமூகத்தின், சிதைந்த குடும்பங்களின் சிறுவர்களாய் இருந்தவர்கள். இலக்குகளேதுமற்ற தரிசு வெளியில் ஏதாவது ஒரு பிடிமானத்தைத் தேடியலைகிற உயிரிகள். Bruno சுய அழிப்பிலும் செக்ஸினுள்ளும் தன்னைப் புதையுண்டு போகச்செய்ய மி்ஷெல் தனது மூளையினுள் மூழ்கி தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறான் (cerebral). ப்ரூனோவும் மி்ஷெலும் வெல்பெக் விமர்சிக்கின்ற சமூக அமைப்பின் பிரதிநிதிகள் அல்லர். அவர்களது செயற்பாடுகள் 60களில் ஏற்பட்ட மாற்றங்களின் தொடர்வினைகளாகவே தோற்றம் தந்தாலும் உண்மையில் அச்சமூக மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே அவர்கள் (victims of a socio-cultural transition/transformation). நூலின் பக்கங்களில் வெல்பெக்கினால தாராளமாகவே மேற்கோளிடப்படும் Auguste Comte பக் 129இல் இவ்வாறு மேற்கோளிடப்பட்டிருக்கிறார்: `When it is necessary to modify or renew fundamental doctrine, the generation sacrificed to the era during which the transformation took place remain essentially alienated from that transformation, and often become directly hostile to it.` ஆக, 60களின் தாராண்மைவாதப் புரட்சி எனும் சமூகமாற்றத்துக்கு தவிர்க்க முடியாதவகையில் பலியிடப்பட்டவர்களாய் மிஷேலையும் ப்ரூனோவையும் கொள்ள முடியுமென நினைக்கிறேன்.


ப்ருனோவினுடைய பதின்மவயதுகள் ஓர் விபத்தாகவே கடந்தன. மி்ஷெல் தனித்திருந்ததால் உயிர்வாழ்ந்தான். அவனுடைய வாழ்வு என்பது மூளை சம்பந்தமானதாக மாத்திரமே இருக்கிறது -A cerebral life. இத்தனைக்கும் மூல காரணமாயிருப்பவள் ஜேன் – மி்ஷெலினதும் ப்ரூனோவினதும் தாய். கட்டற்ற ஹிப்பி வாழ்க்கையில், ஹெடோனிசத்தில் மூழ்கி `தாய்` எனும் ஸ்தானத்தில் இருந்து விலகிய ஜேன், மற்றும் அவளது தலைமுறை.

நாவலில் ஜேன் இனுடைய நியாயங்கள் சொல்லப்படுவதில்லை. ஹிப்பி வாழ்வை அவாவுவதன் பின்னிருக்கிற உளவியல் தேவைகளை வெல்பெக் எதிர்கொள்ளவில்லை.  வெல்பெக்கின் கரிசனையெல்லாம் ஜேன் என்கிற அடங்காப்பிடாரி `பெண்`ணால் `கைவிடப்பட்ட` `ஆண்`குழந்தைகளின் மீதே இருக்கிறது.

ப்ரூனொ கீழைத்தேய மனைவியைப் போல நடந்து கொள்ளும் ஒருத்தியிடம் மாத்திரமே திருப்தி அடைகிறான். நாவல் மரபார்ந்த விக்டோரிய மனைவிகளியும் தாய்களையும் அவாவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜேனின் மரணப்படுக்கையில் அவளருகில் இருந்து ப்ரூனொ சொல்லும் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவை: ‘அவர்கள் உன்னை எரித்தால் நல்லது.. நான் உனது சாம்பலை எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாள் காலையும் மூத்திரமடிப்பேன்.’ [வெல்பெக்கின் நிஜவாழ்க்கையிலும் ஜேன் போன்ற அம்மா தான். வெல்பெக்கிற்கு 12 வயதாயிருக்கையில் ஹிப்பி வாழ்வைத் தேர்ந்தெடுத்த அம்மா பிரிகிறாள்.]

வெல்பெக்கின் நாவல் ஒரு சமூகத்தின் மீதான விமர்சன வாசிப்பு – தாராளவாத சமூக அமைப்பின் மீதான மீள்பார்வையைச் சாத்தியமாக்கும் விமர்சனங்களால் ஆகியிருக்கிறது நாவல். நாவலின் பக்கங்களில் பாலியல் புரட்சியாளர்களுக்கு வயது ஏறுகிறது. அவர்களது உடல்கள் வயதடைகின்றன. விரக்தியும் சோர்வச்சமும் சேர்ந்து ஏறுகிறது வயது. பாலுறவை மையப்படுத்தாத, அதற்குப் புறம்பான இணைவுகளையும் அடர்த்தியான தொடர்புகளையும் பேணத்தவறிய அவர்களை இறுதிக்காலத் தனிமையின் யதார்த்தம் அச்சமடையச் செய்கிறது. இந்த தரிசு நில நிலையை சமூகம் atomise செய்யப்பட்டதன் விளைவு என்கிறார் வெல்பெக். தனிமனிதவாதத்தினுள் ஹீடனிசத்துள் (hedonism) அனைத்தும் அமிழ்ந்து விடுகின்றன. அர்த்தமுள்ள பிணைவுகளை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட உடைந்து சிதறுகிறது சமூகம். ஃபூக்கோவின் பிரதிகள் நிகழ்த்திய கட்டுடைப்புகளுக்கு உள்ள அதே முக்கியத்துவம் வெல்பெக் முன்வைக்கும் நுண்ணிய அவதானிப்புகளுக்கும் உண்டு.

60களில் ஏற்பட்ட தாராளவாத பாலியல் புரட்சி பெண்ணிய வாதம் என்பவற்றுக்குப் பிந்தைய சமூகத்தை வெல்பெக் அணுகும் கோணம் அதிர்ச்சியூட்டும் சித்திரத்தை தருகிறது. இச்சமுக மாற்றத்தின் விளைவுகளென எஞ்சியிருப்பவை மனிதாயத்தின் சிதைவு, தொடர்வுறுத்துவதிலும் தொடர்புறுவதிலுமான தோல்வி, misanthropy போன்ற எதிர்மறைகளே என்பதை நிறுவுகிறார் வெல்பெக். நாவலின் கதாபத்திரங்கள் மதத்தின் வீழ்ச்சி தனிமனிதம் என்பவற்றின் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கும் அப்பாவிகள். மரபு / பழமை பேணும் நிலை என்பது சமகாலப் போக்குகளின்படி எரிச்சலூட்டக்கூடியதுதான் என்றாலும், வெல்பெக் வித்தியாசம் வித்தியாசமான சமூக/தனிமனிதச் சூழ்நிலைகளிலிருந்து தெளிவான ஆதாரங்களினை எடுத்துக் கோர்த்து நிறுவுவதன் மூலம் தனது நாவலை தவிர்க்கமுடியாத ஓர் பிரதியாக்கி விடுகிறார்.

வெறுமை அவநம்பிக்கை ஆகியவற்றை நாவல் முன்வைக்கிறது. அவநம்பிக்கைவாத நாவலென (nihilistic novel) இதை ஒரு சாரார் வகைப்படுத்துகின்றனர். நாவல் முழுதும் அவநம்பிக்கை விரவியிருப்பதை மேலோட்டமான முதல் வாசிப்பிலேயே உணர முடியும். ஆனால் த கார்டியனின் அலெக்ஸ் கிளார்க் கூறுவது போல அவநம்பிக்கை வாத நாவலென இதை அடையாளாப்படுத்துவது குறைமதிப்பீட்டின் விளைவுதான். நாவலின் கதாபத்திரங்கள் கருத்துக்களைச் சொல்லியவாறேயிருக்கின்றன. சில நம்பிக்கைச் சாத்தியப்பாடுகள் இடையிடையே உண்டு. விவாதங்களினூடான வெளியை உருவாக்கித் தருவதால் `அவநம்பிக்கையை விவாதிக்க` உதவும் நாவல் எனலாம்.

பாலியல் விபரிப்புகள் நாவலில் நிறைய உண்டு. ஆனால் அந்த உறவுக்கான பெறுமானம் அங்கு இருப்பதில்லை. உடலுறவின் தருணங்களை வெல்பெக் எழுதிச்செல்லும் விதம் கவர்ச்சிகரமானதல்ல. அசௌகரியத்தை உண்டுபண்ணும் மொழியும் காட்சிப்படுத்தல்களும். உறவு கொள்ளமுடியாமை, பலவீனம், குற்ற உணர்வு என பாலுறவின் தருணங்கள் செருகப்பட்ட அதிர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. ஒரு சில சித்தரிப்புகள் அசூசையுணர்வை ஏற்படுத்தவில்லை என்றால் அவ்வுறவின் பின்னணி சந்தோ்ஷமளிக்கக்கூடிய ஒன்றாக இருக்காது. அது ஓர் கடமை போல, தேவையின் அடிப்படையில், உடலின் அவஸ்தை தரும் நிர்ப்பந்ததின் அடிப்படையில் ஏற்பட்டதாக இருக்கிறது. பாலுறவையும் வெல்பெக்கையும் பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. தனது இளவயதில் புறக்கணிப்பினை தான் அழகின்றி இருப்பதான உணர்வினைத் தான் அனுபவித்ததாக வெல்பெக் கூறுகிறார். அவருடன் பாடசாலைப் பார்ட்டிகளில் நடனமாட யாரும் விரும்பவில்லை .ஆனால் அவை வெறும் பிரமைகளே எனவும் அவர் ஒத்துக்கொள்கிறார். ஆனால் தான் இவ்வாறான பிரமைகளில் சிக்கியிருந்ததற்கான காரணிகளை அவரால் துல்லியமாக அவரால் இனங்காட்ட முடிகிறது. அழகு ஓர் பரிமற்றாக இருக்கிறது. பாலியல் புரட்சி – சமத்துவத்தைஇ சுதந்திரத்தை வலியுறுத்திய பாலியல் புரட்சி வெளித்தெரிய முடியாத மனச்சிக்கலுற்ற ஓர் கீழ்வகுப்பை தாராளவாத சமூக அமைப்பில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த விளிம்பு நிலையே நாவலில் கவனப்படுத்தப் பட்டுள்ளது. வெல்பெக்கின் கதாபாத்திரங்கள் இவ் விளிம்பு நிலை மனிதர்களே.

நாவல் அளிக்கும் பார்வைக்கோணத்தின் படி மேற்குலகினர் தங்களது உடம்பிலிருந்து அந்நியப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளமை புலனாகிறது. ட்ரிப்பிள் எக்ஸ் உலகின் ஆதிக்கம் நிலவும் படுக்கையறகள் கொண்டதே மேற்கு என்பது ஓர் புதிய விடயமல்ல. ஆனால் அது அவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில்லை.சுத்தம் சுகாதாரம் போன்ற காரணிகள் பற்றிய பிரக்ஞை கிட்டத்தட்ட ஓர் ஆட்டுவிப்பு மனோநிலையாக (obsessive) மாறியிருக்கிறது. போர்ணோ உலகின் தரங்களுக்கு சமமாக அமையாத தங்களின் உடல் குறித்த குற்ற உணர்வுடன் மனத்தாழ்வு கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது தாராளவாத பாலியல் புரட்சிக்குப் பிந்தைய சமூகம். ஒவ்வொருவரும் உறைந்து பகுத்தறிவிற்குள்ளும் தனிமனித சுய பிரக்ஞையினுள்ளும் சிக்கிக் கிடக்கின்ற அவல நிலை – உள்புதைந்த மனிதர்களின் கட்டடமாக மேற்கு மாறியிருக்கிறது. மி்ஷெல் ஃபூக்கோ தாராளவாத அமைப்பின் மீது வைத்த விமர்சனங்களின் அடுத்த கட்ட நகர்வே மி்ஷெல் வெல்பெக்கின் புனைவுகள் எனலாம். வழமைக்கு மாறான புணர்ச்சி நிலைகளை வெல்பெக் எழுதிய போது பல விமர்சனங்கள் அதைக் கண்டித்தே எழுந்தன. இதிலிருந்தே வெல்பெக்கின் தரப்பில் நியாயமிருப்பதை உணரமுடிகிறது. எவ்வளவு தான் முயன்றாலும் பாலுறவை மிக இயல்பான, இயற்கையான ஒன்றாகப் பாவனை பண்ணிக்கொள்ள முடிவதில்லை.

வெல்பெக் நிற, இனத் தூய்மை வாதியெனவும் பிறதேச வெறுப்புள்ளவரெனவும் michel.jpgmichel.jpgஅடையாளங்காணப்படுகிறார். இவ்விமர்சனக்களில் உண்மை இல்லாமலில்லை. நீக்ரோக்களுக்கு எதிரான அவரது துவேஷம் the elementary particles நாவலின் சில பகுதிகளில் வெளிப்பாடடைந்தது. அவர் இனவாதியாக இருப்பதற்குச் சொல்லும் தன்விளக்கம் மேலோட்டப் பார்வையில் அபத்தமானதாகத் தோன்றக்கூடும்: We are not born racists. We are made into because of the penis envy – said Bruno. முஸ்லிம்களுக்கும் அரபியர்களுக்கும் எதிரான அம்சங்கள் நாவலில் நிறையவே உண்டு. இஸ்லாம் ஒரு முட்டாள் மதம் என்கிறான் மி்ஷெல்.

1930களில் பெர்டினாண்ட் செலைன் இனவாத (anti-Semitic) எழுதினார்: I think I’ll go and live in Ireland, Where they don’t like the English or the Jews. செலைன் என்ன செய்ய விரும்பினாரோ அதை மி்ஷெல் வெல்பெக் அவரது நிஜ வாழ்விலும் அவரது கதாநாயகன் மி்ஷெல் புனைவிலுமாய் செய்கிறார்கள். நாவலில் மி்ஷெல் அயர்லாந்தில் சந்தோஷமாக இருப்பதாய்க் கூறப்படுகிறது: Michel is relatively happy in Ireland, where they still go to the mass. மதத்தை மீள்வலிதாக்கம் செய்வதற்கான முனைப்பு இவ்வரிகளில் தென்படுகிறது. தஞ்சமடையும் வெளியே மதம் என்று வாதிட முடிந்தாலும், Da vinci Code இற்குப் பிறகான மதத்தின் மீளெழுச்சியுடன் இதை இணைத்துப்பார்க்க வேண்டியுமுள்ளது. திருச்சபைகள் தமது பிரச்சாரச் செயற்பாடுகளை உலகளாவிய ரீதியில் முடுக்கி விட்டுள்ளன. அவர்களது பிரச்சார வேலைத்திட்டத்தினுள் நாவல் கச்சிதமாக பொருந்துகின்றது. (இப்படியான கொன்ஸ்பிரேசிகள் எப்போதும் இருந்தபடியே தான்: பொரிஸ் பாஸ்டர்நாக், சோல்செனிட்சின், ஓர்வெல் பின்னர் இப்போது புக்கர் பெறுகிற `பின் காலனிய` நாவலாசிரியர்கள்!!!)

வெல்பெக் வருமான வரிச்சிக்கல்களை முன்னிட்டு அயர்லாந்தில் வசிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவரது நிலைப்பாடுகளை ஆராய்கையில் எங்கேயோ இடறுகிறது. அயர்லாந்து celtic தீவு என்பது அனைவருமறிந்த விடயம். 60களின் மாற்றங்கள் அயர்லாந்தில் பெரிதாக எதையும் மாற்றவில்லை. மதத்தில் தஞ்சமடைவதை நியாயப்படுத்துகின்ற, மேலைத்தேயக் கலாச்சாரத்தின் சிதைவைப் பேசுகிற ஓர் எழுத்தாளருக்கு மாற்றங்கள் இன்னும் அணுகாத கெல்டிக் அயர்லாந்து உவப்பாயிருப்பதில் வியப்பேதுமில்லை.

Elementary particles இனைத்தொடர்ந்து வெளிவந்த Platform இல் இனத்துவேஷக்கூறுகள் தூக்கலானவையாக அமைந்து வெல்பெக்கிற்கு எதிரான வழக்குகளை சம்பாதித்துக்கொடுத்தன. Platform மூன்றாமுலகின் பொருளாதாரச்சிக்கல்களுக்கு படு அபத்தமான தீர்வொன்றை முன்மொழிகிறது : முதலாமுலகத்தினர் மூன்றாமுலகின் மீது செக்ஸ் சுற்றுலாக்களை மேற்கொள்வதன் மூலம் அனைத்தும் தீர்ந்து போய்விடும்!

மானுடவியல் ரீதியான விழிப்புணர்வு வெல்பெக்கிடம் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு. அனல்காற்றின் போது பிரான்ஸின் கைவிடப்பட்ட முதியவர்கள் பரிதாபமாகச் செத்துப்போவதை ஆவணப்படுத்துகிறார் ஓரிடத்தில். விஞ்ஞானப் புனைகதையின் பாவனையில் கருத்துக்களை முன்வைப்பது அவரது வழக்கமாகி விட்டது. சமகாலப் போக்குகளை மிக உன்னிப்பாக அவதானித்துப் பதிவு செய்கின்ற போது அவற்றை தனது கருத்துகளுக்குச் சாதகமான அம்சமாக மாற்றிவிடும் கெட்டிக்காரத்தனம் வெல்பெக்குக்கே உரியது.

Platform பாலியல் புரட்சியின் எதிர்மறையான விளைவுகளை விபரிக்கிறது. கதானயகன் மி்ஷெலும் அவனது காதலி வெலேரியும் சுற்றுலா ஏஜென்சியொன்றை உருவாக்குகிறார்கள். கவர்ச்சி ஒரு பரிமாற்ற ஊக்கியாக (exchange) தாராள வாத சமூகத்தில் இயங்குகிற நிலையை பகடி செய்கிறது நாவல். டில்டோக்களில் பாலுறவுத்தேவைகளுக்காகவும் செல்லப்பிரணிகளில் அன்புக்கும் ஆதரவுக்கும் தங்கியிருக்கும் விரக்தியுற்ற மேற்குலகினரை கீழைத்தேசங்களுக்கு பாலியல் சுற்றுலாவுக்கென அழைத்துச் செல்லும் சுற்றுலா ஏஜென்சி – குறிப்பாக தாய்லாந்துக்கு – நீங்கள் அழகா அசிங்கமா எனக்கவலைப்படாத பாலியல் தொழிலாளர்கள் நிறைந்த தாய்லாந்துக்கு.

நியூயோர்க் டைம்ஸ்ஸின் ஜென்னி டேர்னர் கூறுவது போல வெல்பெக் பாலியல் சுற்றுலா குறித்து எழுதும் விதம் அதை அருவருப்பூட்டக் கூடிய விதத்தில் தத்துவப்படுத்துகிறது. மேலைத்தேயக் கண்ணோட்டத்திலேயே அக் கருத்துருவம் வடிவமைக்கப் படுகிறது. துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறுவயதிலேயே அந்த நரக வாழ்வினுள் தள்ளப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து வெல்பெக் ஒப்புக்கு சில இடங்களில் கிறுக்கியிருந்தாலும் அத்தகைய அனுதாபம் கூட பிரசுர நிர்ப்பந்தமாயிருக்கலாமோ எனச் சந்தேகிக்கும் அளவுக்கு மிகக்குறைவான அளவில் கதையின் தொனிக்கு ஒவ்வாத விதத்தில் கலக்கப் பட்டுள்ளது: ‘they didn’t have an easy job. Those girls.`

platformஇல் இஸ்லாம் மீதான அவமதிப்பு முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் வாயில் திணிக்கப்படுகிறது: ‘ஓரு பாலஸ்தீனத் தீவிரவாதியோ அல்லது பாலஸ்தீனக் குழந்தையோ அல்லதி ஓர் பாலஸ்தீனக் கர்ப்பிணிப் பெண்ணோ காஸாவில் சுட்டு வீழ்த்தப்படும் செய்தி என்னை எட்டும் போதெல்லாம் நான் பரவசமடைகிறேன். ஏனெனில் அது முஸ்லிம் சனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டதைக் குறிக்கிறது.’ இந்த வார்த்தைகள் 9/11 ஐ தமது நியாயமாகக் கொள்கின்றன. வெல்பெக்கின் மிகச்சமீபத்திய நாவலான Possibility Of an Island இலும் வெல்பெக்கியக் கதாநாயகன் (Houllebecqian Hero) வருகிறான். வெல்பெக்கின் முந்தய நாவல்களில் நடந்ததைப் போலவே இதிலும் அவனது தன்னிலை விளக்கமும் வெளிப்பாடுகளும் நாவலின் உயிரை உறுஞ்சி விடுகின்றன. இந்த நாவலிலும் முஸ்லிம்கள், அரேபியர்கள், மற்றும் சிறுவர்கள் மீதான துவேஷம் வெளிப்படுத்தப் படுகிறது. டேனியல் 1 கூறுகிறான்: “The Palestinian orgy Sluts” was undoubtedly the pinnacle of my career”. அவன் எடுக்கும் நீலப்படத்தின் தலைப்பு ‘Munch on my Gaza strip, My huge Jewish Settler.” ஆக்கிரமிப்பாளன் – அடிமை உறவுகள் நீலப்பட உலகில் ஒன்றும் புதியவையல்ல எனினும் கூட பாலஸ்தீனத்துடன், முஸ்லிம் பெண்மையுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தொடர்வுறுத்தி erotic பிரதியொன்றை தயாரிப்பது பற்றிய சிந்தனையின் மூலவேர்கள் புதிரானவை. அதுவும் ஓர் வெள்ளை அறிவுஜீவியிடமிருந்து வருகையில்?

தடாலடியாக கருத்துச் சொல்வதில் முன்னோடியாக வெல்பெக்கைத் தான் இனிவரும் கலைஞர்கள் கொள்ள வேண்டியிருக்கும். அவரைப் பொறுத்தவரை, ்ஷேக்ஸ்பியர் ஒரு sad fool. ஜேம்ஸ் ஜொய்ஸ்: சிக்கலான சலிப்பூட்டக்கூடிய கதைகளை எழுதிய ஐரிஸ் பைத்தியம். விளாடிமிர் நபக்கோவ் ஒரு போலிக் கவிஞர். அகதா க்ரிஸ்டி வெல்பெக்கிடம் பாஸ் மார்க்ஸ் பெறுவது ஏன் என்பதை உங்களைப் போலவே நானும் அறியேன் – அதுதான் மிஷெல் வெல்பெக்.

குற்றவுணர்வேதுமின்றி xenophobic இமேஜை மெயின்டெயின் செய்வதும், கோர்ட்டுகளில் ஏறி வாதாடி வருவதும், Time பத்திரிக்கையின் பெண் நிருபரை புணர்ச்சிக்கு வருமாறு அழைத்தசம்பவமும் அவரை ஒரு Enfant Terrible ஆக மாற்றிவிட்டன. வெல்பெக்கின் விசிறி விமர்சகர்கள் அவரது கருத்து நிலைகளை நியாயப்படுத்துகின்ற விதம் கவனிப்புக்குரியது. வெல்பெக்கை உள்ளுணர்வு வாதி (Intuitive intellect) என்பதன் மூலம் அவரது சகல செயல்களையும் நியாயப்படுத்த முடிகிறது அவர்களால்.

Elementary particles 1998 இல் பிரான்சின் கௌரவத்துக்குரிய இலக்கிய அங்கீகாரமான Prix Novembre விற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே தேவையானளவு கெட்டபேரைச் சம்பாதித்திருந்த வெல்பெக்கிற்கு எதிராக பாடசாலை ஆசிரியர் சங்கம் வேறு அச்சமயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தியது. ஆனால் ஜுலியன் பார்ண்ஸ், மாரியோ வர்காஸ் ல்லோசா ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் குழு வெல்பெக்கை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. கிழிந்த ஆடையுடனேயே விழாவிற்கு வந்திருந்த வெல்பெக் குடிபோதையில் இருந்தார். அவரது இத்தகைய பிரசன்னம் பரிசினை ஸ்பொன்ஸெர் செய்யும் பணக்காரர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அனைவரும் அதிருப்தி அடைந்திருந்த நேரத்த்தில் ல்லோசா நாவல் குறித்த மிகச்சரியான விளக்கத்தைக் கொடுக்கும் வார்த்தையொன்றை முன்வைத்தார் : The Insolent Art of Michel Houellebecq. அவர் இதை ஓர் புகழ்ச்சியாகவே கூறியிருந்தார். அவரது வார்த்தை வெல்பெக்கிற்கு பொருத்தமானதுதான் – சகலவிதத்திலும்!

(வெல்பெக் மீதான எனது வாசிப்பு அவர் குடும்ப அமைப்பையும் மத்ததையும் வலியுறுத்துகிறார் என்பதாக michel.jpgஅமைந்தது. கட்டாயமாக அந்த ‘இணைவு’ குடும்பமாகத்தான் இருக்க வேண்டுமா என்பது ஓர்michel.jpg கேள்வி)michel.jpg

வாசிப்பு பட்டியல்

 • The Elementary Particles – Novel by Michel Houllebecq ( French)
  Translated by: Frank Wynne
  Published by: Alfred A.Knopf, New York 2000Dec
 • The Platform – Novel by Michel Houllebecq (French)
  Heinemann 2002
 • The possibility of an Island – Novel by Michel Houllebecq (French)
  Translated by: Gavin Bowd
  Published by: Alfred A.Knopf 2006
 • 90% HATEFUL – A new novel by the provocative Michel Houellebecq.
  Review by JOHN UPDIKE for Possibility Of An Island
  Newyorker – Issue of 2006-05-22
 • HATE AND HEDONISM – The insolent art of Michel Houellebecq.
  Review by JULIAN BARNES for The Elementary Particles.
  Newyorker – Issue of 2003-07-07
 • The man can’t help it – Essay by Suzie McKenzie – Guardian – Saturday August 31, 2002