பெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்

(சுமதி சிவமோகன் அவர்களின் இடையீடுகளுடன்.)

`பெண் எழுத்து` குறித்து முரண்வெளியில் நான் எழுதிய ஒருதொகைப் பிரதிகளில் ஒன்றான `நீரளவே தானா நீராம்பல்?` கட்டுரை கொழும்பில் இருந்து வெளியான `சரிநிகர்` சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. கட்டுரை பிரசுரமான இதழுக்கு அடுத்து வெளிவந்த இதழில் இரு எதிர்வினைகள் பிரசுரமாகியிருந்தன.

 ஈழக் கவிதைப் புலத்தின் கவிதைகளில் எனது இரசனைக்கு இருந்திருக்கக் கூடிய முன்னீடுபாடுகளை ஊகம் செய்த அரவிந்தன் அவர்களது எதிர்வினைக்கு மறுவினையாற்றும் முனைப்பு அப்போதும் சரி இப்போதும் சரி என்னிடம் கிளர்வதாய்க் காணோம். அவரது அவதானங்கள் ஆர்வமுடைய வாசகர்களுக்குப் பெறுமதியானது என்பதைத் தவிர சொல்வதற்கு எனக்கொன்றுமில்லை.

 சுமதி சிவமோகனின் எதிர்வினை எனது தத்துவ ஈடுபாடுகள், அதன் சாய்வுகள் பற்றி மிகவும் பெறுமதியான கேள்விகளை எழுப்பியிருந்தது. அவரது எதிர்வினை பிரசுரமான மாதங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிந்து மூடுண்ட யாழ்ப்பாணத்தில் இருப்பதற்கான `சாட்டுக்கள்` இல்லாமல் போய்விட்ட நிலையில், கொழும்புக்கான பயணத்துக்கான கடவுச் சீட்டைப் பெறல், லஞ்சங்களைச் செலுத்துதல் போன்ற பிரச்சனைகளுக்குள் சிக்குண்டுபோனதில் நான் மறுவினையாற்றுவது பின் தள்ளிப் போனது. கொழும்பில் வந்திறங்கிய பின் ஏதோ ஒரு தாளில் எழுதி மடித்து வைத்த மறுவினையை கணினியில் அச்சேற்றுவதற்கான வாய்ப்பு பல்லாயிரக்கணக்கான இடையூறுகள் காரணமாய் இன்றுவரை வாய்க்கவில்லை. கிடைத்த இச்சந்தர்ப்பத்தில், குற்றங்களை ஒப்புக்கொள்ளும் ஓரிரு வரிகளை இடைச்சொருகியபடி. மித்ராவின்(எனது) 2008 பதில்களை வலையேற்றுகிறேன்.

 நீரளவேதானா நீராம்பல் கட்டுரை

சுமதி சிவமோகனின் எதிர்வினை வெளியான சரிநிகர் சஞ்சிகையின் பக்கங்கள்

[அரவிந்தனின் நீண்ட எதிர்வினையைப் படிக்க விரும்புவோர் செப்ட்-ஒக்டோபர் 2007 சரிநிகர் இதழை PDF கோப்பாக நூலகம் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.]

சுமதி சிவமோகன்: பெண்களோ அல்லது ஆண்களோ அல்லது வேறெந்த பாலையுஞ் சார்ந்தவர்களுமோ, குறிப்பிட்ட குணாதிசயங்களைத் தமது கவிதைகளிலோ எழுத்துக்களிலோ அடக்கிக் கொள்ளவேண்டும் என்று கூறுவது பிரச்சனைக்குரிய விடயமாகும்

மித்ரா (ஹரி): கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட எனது அபிப்பிராயங்களை சுதந்திரமான பால்நிலைகளின் மீது பொறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமத்தும் கூற்றுக்களாய் வாசிப்பது சிக்கலானது. பால்நிலைகள் இன்ன இன்ன விதங்களில் எழுதவேண்டும், குறித்த விடயங்களை எழுத வேண்டும் என்பது எனது பிரச்சனை அல்ல. தனி மனிதர்கள் தமக்கான எழுதுபொருள்களைத் தேரும் சுதந்திரம் கொண்டவர்கள். என்னுடைய ஈடுபாடு பிரதிகளுக்குள்ளாகப் பால்நிலைப்படுத்தப்பட்ட தன்னிலைகள் (gendered subjectivities), தன்னிலைக்குட்படுத்தப்படும் பால்நிலைகள் (subjectivated genders) தொடர்பானது.

மேலும் குறிப்பாகச் சொல்லப்போனால், வேலைத்திட்டமாக பெண்கள் ஆய்வு வட்டத்தால் (பெயர் சரியாக நினைவில்லை, எண்பதுகளில் சித்ரலேகா மௌனகுரு அவர்களால் நல்லூர் சங்கிலியன் வீதியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஒரு நிறுவகம்..) அறிவிக்கப்பட்டட்தைத் தொடர்ந்து `பெண் எழுத்து` என்ற வகமையைத் தமது அடையாளமாய்க் கோரியபடி வெளியாகும் ஒரு தொகைப் பிரதிகள் பற்றியே நான் ஆர்வங் கொண்டிருந்தேன்.

எனது கட்டுரையில் பெயர் சுட்டப்பட்டிருக்கும் பிரதியாளர்கள் யாவருமே ஏதோ ஒருவகையில் நேரடியாகவோ மறைமுகவோ `பெண் எழுத்து` என்கிற வேலைத்திட்டத்துக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். அவர்கள் கோரும் `பெண் எழுத்து` என்கிற இலக்கிய வகைமைக்கான தகுதிகள், குறித்த பிரதிகளிடம் இருக்கிறதா இல்லையா என்பதையே என் கேள்வியாகக் கொண்டேன்.

வீரகேசரி நாளிதளில், அல்லது ஞானம், மல்லிகை போன்ற நடுத்தர இதழ்களில் எழுதுகிற எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து எனது பிரதி விலகி நிற்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். ஏனெனில், அவர்கள் `பெண் எழுத்து` என்கிற வேலைத்திட்டத்தின் பங்காளிகளாய்த் தம்மை அறிவித்துக் கொண்டவர்களல்ல. (பெண் எடுத்துரைப்பியல், இனவரைவுகள் என்று வருகையில் வீரகேசரி/ஞானம்/மல்லிகைப் பெண்கள் சுவாரசியமானவர்கள் என்பது வேறு கதை.)

சுமதி சிவமோகன்: பெண்ணிய எழுத்து, பெண்ணிய மொழி என்றெல்லாம் ஒரு பெண்ணிய சாராம்சத்தை முதன்மைப் படுத்துவது பிரச்சனைக்குரிய விடயம்.

மித்ரா (ஹரி): மொழிதல்களுக்குள் பெண் என்பது சாரம்சப்படுத்துதல் கிடையாது. மாறாக, பெண் என்பதன் மொழிதல் சாத்தியப்பாடுகள் எவை என்பதைக் கண்டடைய முயல்வதே அது. இங்கு `பெண்` என்பது சாராம்சமற்ற ஒரு `signifier’. பெண்ணிய மொழி என்பது இதுதான் என்று யாரும் வரையறுத்து விடவில்லை. எனது கட்டுரையில் வரையறைகளையே பெரும்பாலும் சாடியிருந்தேன். குறிப்பாக சில பெண் கவிகளின் மொழிதல்கள் தமக்குத் தாமே வரையறைகளை இட்டுக் கொள்வதும், தமது விரிவுகளின் முடிவிலிச் சாத்தியங்களை அறியும் முனைப்பற்று இருப்பதுவும் எனது விமர்சனத்துக்குள்ளாக்கப் பட்டிருந்தது. எல்லைப்படுத்தும் சாராம்சவாத அடையாளப் பரிந்துரைகளை உங்களைப் போலவே நானும் அவாவுவதில்லை.  அவற்றின் மிக அசிங்கமான அனுபவிப்புகளில் நாளாந்தம் அல்லலுறுபவன் நான் என்பதும் இதகு அப்பாற்பட்ட மேலதிகக் குறிப்பு. என்னதான் பாதகங்கள் இருந்தாலும், சில சமயங்களில், குறிப்பாக எதிர்ப்பு இலக்கியம் என்கிற மாற்றமுறு(transitional) இலக்கியக் காலப்பகுதியில் சிறிதளவு சாராம்சவாதம் போல் தோற்றமளிக்கும் இயல்புகளைத் தவிர்க்க இயலாது போய்விடுகிறது. [பின்காலனித்துவ இலக்கியத் தன்னிலைகளை இங்கு நினைவு கொள்க] இவ்வாறு கட்டமைக்கப்பட்ட பிரதியியல் அடையாளங்கள், எல்லா விடயங்களையும் போலவே, கட்டவிழ்ப்புக்கும் ஏன் முற்றான அழிப்பொன்றுக்கும் கூடக் கட்டுப்பட்டவையே (liability to be de-constructed).

சாராம்ச அடையாளங்கள் குறித்து சுமதி சிவமோகனால்அடிக்கோடிடப்படும் காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பீவக் அவர்களே கூட  2000ங்களில் ஏதோ ஒரு இடத்தில் Strategic Essentialismத்தை கொண்டியங்க வேண்டியிருப்பதன் தவிர்க்க-இயலாமைகள் பற்றி எழுதி வாசித்த ஞாபகம். கூகிள் தேடுபொறியில் குறித்த பிரதி அகப்படமாட்டேன் என்கிறது. (ஆர்வங்கொண்டோர் பின்னூட்டப்பெட்டியில் பிரச்சனைப்படுத்தினால், மெனைக்கட்டு இருந்து தேடி இணைக்க முயல்வேன்!)

சுமதி சிவமோகன்: ஒரு பெண் இவ்வாறுதான் எழுதவேண்டும், பெண் மொழியைக் கையாள வேண்டும் என்று கூறுவது, நான் ஒரு பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுபவளின் அகநிலை சார்ந்த இயங்குதல் சக்தியை (agency) புறக்கணித்து அப்பெண்ணில் மேல் செலுத்தும் ஒருவித (ஆண்) ஆதிக்கத்தின் சின்னமாகும்.

மித்ரா (ஹரி): Agency என்பது பிரச்சனைப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட புனிதமான விடயமல்ல. சமூகம், கலாசாரம், இவ்விரண்டிற்குள்ளும் தனியன் என்கிற ஊடாட்டத்தின் எண்ணற்ற உராய்வுகளின் தாக்கத்தில் இயக்கமுறுவதே Agency. இந்த agency யின்  மொழிசார் வெளிப்பாடாய் இருக்கும் ஒருதொகைக் கவிதைப் பிரதிகள், ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாமல் அந்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட மொழிபுகளாகவே அமைந்து விடுகின்றன. இந்த இழையில் ஒரு இடையீட்டை செய்வது கண்டிப்பாக agencyயினைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்து விடக்கூடும் தான். இது ஆரோக்கியமானதே. ஜூடித் பட்லர், நான்சி ஃப்ரேசர், ஷீலா பென்ஹாபிப் எல்லாரும் திரும்பவும் திரும்பவும் வாக்குவாதப்பட்டுக் கொள்கிற அதே விடயம் தான். Formulation of agency. சமூக உறவுகளுக்குள் தகவமையும் Agency என்பதன் தகவமையும்-செயன்முறைக்குள் இடையீடு செய்வது எப்படி? Agencyயின் வெளிப்பாடுகளை குறுக்கிடுவதன் மூலம் அந்த இடையீடு சாத்தியமா எனப் பரிசோதித்துப் பார்த்தல். சுமதி சிவமோகன் Agencyயின் புனிதப்படுத்தலை ஆராதிக்கப் போவதில்லை என நம்புகிறேன். பொதுவெளியில் முன்வைக்கப்படும் எல்லாவற்றையும் Agency என்கிற கடவுச்சீட்டில் அனுமதித்து, அவற்றின் இருப்பு மீதான கேள்விக்குட்படுத்தல்களைத் தடை செய்ய முடியுமாயின்… விளைவுகளைக் கற்பனை செய்யவேண்டியதில்லை. இலங்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

Agencyயைக் கேள்விக்குட்படுத்துவது, அதன் வழி Agency தகவமையும் சூழ்நிலைகள், அதற்கான வழங்கிகள் பற்றியசந்தேகங்களை எழுப்புவது Agencyயைப் புறக்கணிப்பதாக அர்த்தம் கொள்ளப்படலாகாது.

“நான் ஒரு பெண்“ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவள் என்கிறீர்கள். சரி, அவளின் பிரதியியல் அறிவிப்புகளில் அதற்கான சமிக்ஞைகளைத் தேடுவது தவறா? அதற்கான சமிக்ஞைகள் என்றவுடன், அது குறித்து மாதிரியுரு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அம் மாதிரியுரு குறித்த பிரதியில் தென்படுகிறதா இல்லையா என ஆராய்வதாக தயவு செய்து எண்ண வேண்டாம். நான் கோருவது, நான் அறிந்திராத, என்னால் அறிய முடியாத சமிக்ஞைகளை. வித்தியாசங்களை மென்மேலும் துல்லியப்படுத்தும் சமிக்ஞைகளை. மாறாக, சமகால இலங்கைத் தமிழ்ப் பெண் கவியுலகு சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரியான தன்மையுடையதாக அல்லவா இருக்கிறது? பெருங்கவிஞன்களை `போலச்செய்து`/(அபிநயித்து) கிடைத்த ஒரு வடிவத்தினுள்(/ஊடகத்தினுள்) தமது வெளிப்படையான வித்தியாசங்களை கடனே என்று பிரதியீடு செய்து கிடைக்கும் ஏதோ ஒன்றை `பெண் பிரதி` என்று வாசித்துத் திருப்தியுற என்னால் இயலவில்லை. என் பெண்மை நான் பெண்ணாய் மொழிந்த மொழிதல்களிலும் பார்க்க மிகவும் இடியப்பசிக்கலானதாய் என் உடலைப் பீடித்திருக்கிற ஒரு நிலையில், தமிழ்க் கவிதைப் பரப்பில் இச்சிக்கல்களெதையும் பேசும் பிரதிகளை நான் காணேன். இத்திகைப்பினின்றும் சமைந்த ஆதங்கமிகு பிரதியே என் கட்டுரை.

சுமதி சிவமோகன்: இன்று நாம் பெண்ணிலைவாதங்கள், தளங்கள், Post Feminism என்று பேசுகிறோம். பெண் மொழி என்று ஒருவர் ஒருமையில் பேசுவது ஆச்சரியமளிக்கிறது. பெண் மொழி வேண்டுமென்றால் எந்தப் பெண்ணின் மொழி என்ற கேள்வி எழுகிறது.

மித்ரா (ஹரி): பெண்ணிய வெளியில் நிகழ்ந்த அசைவுகளில் துல்லியமாக அடையாளம் காண முடிவது மூன்று தனித்தனியான அலைகளை / காலப்பகுதிகளை மட்டுமே. PostFeminism, NewWave feminism போன்ற trendy யான கோட்பாடுகளுக்கு ஏனோ என் மனம் இசைவதாய்க் காணோம். சொல்லப்போனால், Post-Feministகளாகத் தம்மை அடையாளப்படுத்துகிறவர்கள் உண்மையில் மூன்றாவது அலையின் கோட்பாட்டு நீட்சிகளின் ஆதங்கத்துக்கு குரல் கொடுக்கிறார்களே தவிர தமக்கான தனித்துவமான கோட்பாடுகளை அவர்கள் வளர்த்தெடுத்திருக்கிறார்களில்லை.

பன்மையில் பேசுவதாய் நீங்கள் கூறுவதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். Post-Feminism என்று எடுபட்டுப் போய்விடுவதை விட Post-Unitary Feminist landscape என்கிற ரீதியில் கதையாட இயலுமா என்று யோசித்துப் பார்க்கவே நான் விரும்புகிறேன். இணைந்த, ஒன்றுக்கொன்று குறுக்கிடும் தனித் தனி வரலாறுகள் என்கிற ரீதியில். தமிழில் இந்த உடைவுகளின், பன்மைத்துவங்களின் சாத்தியப்பாடு குறித்து ஒருவர் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்பதை உங்களது எதிர்வினை சொல்கிறது, நான் எனது நிலைப்பாடுகளைத் தெளிவாக மொழியகப்படுத்தவில்லை என்பதையிட்டு வருந்துகிறேன். தமிழில் தலித் பெண், முஸ்லிம் பெண் ஆகிய மொழிபுகள் ஏலவே சாத்தியமாக்கப்பட்டுவிட்ட நிலையில் நான் எனது மொழிவுகளில் பன்மைத்துவத்தைக் கொணர்வதில் அதிகம் வெற்றி பெற்றிருக்கவில்லை. இது துன்பகரமானது.

எனினும் இந்த உடைவுகள், சிதறிக் கொண்டேயிருக்கும் சிதறல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் சற்று எரிச்சலூட்டுவதை, அடையாளம் சார் வேலைத்திட்டங்களை தேவையற்று இடருறுத்துவதைச் சொல்லித்தானாகவேண்டும். வித்தியாசங்களின் முடிவிலித்தன்மை குறித்த பிரக்ஞை வலுவாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கெந்த மாற்று அபிப்பிராயங்களும் இல்லை. ஆனால்… எனக்கு எப்படி சொல்வதெனத் தெரியவில்லை. பெண்ணியம் முதலில் வர்க்கப்பிரக்ஞைகளுடன் உடைந்தது. பிறகு லெஸ்பியன், SM/BDSM இடையீடுகள் நிகழ்ந்தன. பிறகு கருப்புப் பெண்ணியம், மூன்றாமுலகப் பெண்ணியம். இந்த இடையீடுகள் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு ஐயங்கள் எதுவுமில்லை. கருப்பு பெண்ணியம் வந்த பிறகு அதுவும் கூட பிரதேச ரீதியாக உடைக்கப்படவேண்டும் என்று யாரோ வாதிட்டார்கள், மிகவும் உற்சாகமான வாசிப்பாக அது அமைந்தது. அப்படி வாதிட்ட கும்கும் பவானி தொகுத்த `Black British Feminism’ ரீடருக்கு த கார்டியனில் ஒரு உளவியலாளர் எழுதிய விமர்சனத்தை எனது நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்திருக்கிறேன். கீழ்க்கண்டவாறு அவர் எழுதுகிறார்: [A possible danger of putting together a collection of texts which are from a variety of perspectives and positions and appearing to give it all encompassing label of Black British Feminism]….[readers will be led to believe firstly, that all the texts are from the same perspective and secondly Black British Feminism is a homogeneous category itself.] அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை என்னால் ஓரளவுக்கு கற்பனை செய்ய முடிகிறது. வெள்ளை பிரிட்டன் என்பதே வெளிப்படையான நான்கு துண்டுகளாக சிதறுண்ட ஒன்று. ஆழ வேரூன்றிய நொதேர்ன், சதேர்ன் வேறுபாடு வேறு இருக்கிறது. ப்ரொவின்ஷியல் அடையாளம் இங்கிலாந்தில் வன்மையானது. வந்து குடியேறியவர்களே கறுப்பினத்தோர் என்பதால், நீண்ட காலமாய் வதிவோர் (settled black migrants) அண்மையில் குடிவந்தோர், இன்னும் குடியுரிமை பெறாதோர், அவர்களுக்குள்ளும் ஸ்கில்ட் மைகிரன்ற்ஸ், அரசியல் தஞ்சம் கோருவோர்…… இன்னும் அவர்களுக்குள்ளாக இன, மத, மொழி, கலாச்சார, காலனித்துவ வரலாற்று வேறுபாடுகள்…. நிச்சயமாக அவ்விமர்சகர் சொல்வது சரி தான். ஆனால், இதற்காக ஸ்கொட்டிஷ் பிளாக் ஃபெமினிஸம்: எ ரீடர், வெல்ஷ் பிளாக் ஃபெமினிஸம்: எ ரீடர், ஐரிஷ் பிளக் ஃபெமினிஸம்: எ ரீடர், அசைலம் சீக்கிங் ஃபெமினிசம்: எ ரீடர் என்று பிறிம்பு பிறிம்பாக புத்தகம் போடச்சொன்னால் பதிப்பாளர்கள் ர்சியா அஹ்மடையும், பிரதீபா பர்மாவையும் கும்பிடு போட்டு வேலையில் இருந்து நிறுத்தியே விடுவார்கள்.

இந்த வித்தியாசங்களை எல்லாம் கொண்டியங்கும் ஒரு நீர்மையான, வரம்புகளற்ற பிரதேசமே “அடையாளம்“ என்கிற அடியோட்டமான பிரக்ஞை ஒன்று மண்டையில் எந்நேரமும் உறைத்துக்கொண்டு இருந்தால் போதுமானது என நான் நம்புகிறேன். த கார்டியன் விமர்சகர் வாசிப்பாளரை முன்னீடுபாடுகள் அற்ற, எல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டிய சிறுபிள்ளையாகக் கருதி “reader will be led to believe”என்று எழுதுகிறார் என்பதை இங்கு கவனிக்க.

`பெண்மொழி` எனும் ஒற்றைக் கதையாடலை உடைத்தவர்கள் முதன்முதலாய் மூன்றாமுலகப் பெண்கள் தானெனும் ஒரு தொனியும் சுமதி அவர்களது பிரதியில் ஒலிக்கிறது (அதன்வழி `பெண் மொழி` ஒரு மேற்குக் கதையாடல்` என நிறுவுதல்). முக்கியமாக காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பீவாக் குறிப்பிடப்படுகிறார். ஸ்பீவாக்கின் இடையீடுகள் ஒலித்த காலத்துக்கு முற்பட்ட எழுபதுகளிலேயே ஒற்றைக் கதையாடல் கேள்விக்குள்ளாக ஆரம்பித்து விட்டது என்பது தான் என் வாசிப்பு. உதாரணமாக மொனீக் வித்தீழ்-இன் லெஸ்பியன் நோக்குநிலைப்பட்ட பிரதிகளும் அவை சார்ந்த பெண் என்கிற ஒற்றைக் கதையாடல் மீதான எதிர்க்கதையாடல்களும் 70களுக்குரியவை அல்லவா?

சுமதி சிவமோகன்: பெண் என்று நாம் குறிப்பிடும் உருவமே ஒரு கருத்தாக்கம் என்றால், ஒரு அடையாளம் (construct of identity) என்றால் பெண் மொழியும் ஒருவித புனைதல் தான்?

மித்ரா (ஹரி): Of course, பெண்ணுடல், ஆணுடல் எனும் உருவங்கள் (body as concept), அடையாளம் ஆகியன மட்டுமல்ல. எல்லாமே, சகலதுமே பிரபஞ்சம் முழுதுமே கற்பிதம் தாம். மொழிக்கு வெளியே எதுவும் இல்லை என்கிற அடிப்படை Tel Quel பாலபாடம் அது.

சுமதி சிவமோகன்: அது ஆண்/பெண் என்ற வித்தியாசத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப் பட்ட நிலையாகும்.

மித்ரா (ஹரி): நான் அவ்வாறு கருதவில்லை. ஆண் என்பதில் இருந்து வேறுபடும் வித்தியாசங்களில் இருந்து மட்டுமே கட்டமையும் ஒரு தன்னிலையாக, Agencyயாக `பெண்` இருக்கமுடியும் என்று கருதுவது பயங்கரமானது. `பெண்` என்பதன் தனித்துவமான கண்டடைதல்களை மேலும் மேலும் புனைதல்களின் மூலமே ஒருவரால் அர்த்தப்படுத்திக் கொள்ளுதல் சாத்தியம் என்பதை வலியுறுத்தியதே Cixousஇன் `பெண் மொழி` (Ecriture Feminine). இந்தப் புனைதல் ஏலவே இருக்கக் கூடிய வித்தியாசங்களைக்(புனையப்பட்ட,  of course) கையாள நேர்வது, அல்லது அவற்றை விடுத்து புனைவின் அ/சாத்தியங்களைத் தேர்வது எல்லாமே குறித்த பிரதியாளரின் புனைவு எல்லைகளைப் பொறுத்தது. உதாரணமாக ஜூடித் பட்லரின் `நிகழ்த்துகை` `உடல் ஒரு அரங்காக` போன்ற எண்ணக்கருக்களின் கீழ் கட்டமையக் கூடிய தன்னிலை விரிபுகளை, அதன் வழி தேர்ந்துகொள்ளப்படும் Agencyகளை கற்பனை செய்து பார்க்கலாம்.

சுமதி சிவமோகன்: இந்நிலைகள் சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளுடன் சேர்ந்தவைகளாகும்.

மித்ரா (ஹரி): ஆம், ஊடுபாவுகள் நிறைந்த அந்த உறவை, அந்த சிக்கலான செயன்முறையை நீர்மையான தன்னிலைகளில் இருந்து பதிவு செய்வதை Efஇன் ஓர் அங்கமாய்க் கொள்ளலாம் அல்லவா?

சுமதி சிவமோகன்: தமிழன் இவ்வாறு தான் எழுதவேண்டும், முஸ்லிம்கள் இப்படித்தான் எழுதவேண்டும் என்றும் கூறிடலாம்.

மித்ரா (ஹரி): நாம் விரும்பியோ விரும்பாமலோ அடையாளம் சார் வேலைத்திட்டங்களின் நெருக்கீடுகளுக்குள் சிக்குண்டு போகிறோம். இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கண்டிப்பான விதிமுறைகளாய் இவற்றை எதிர்கொள்வதை விடுத்து, குறித்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இப்படியொரு தன்னிலை தன்னை இவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதான வாசிப்பை சாத்தியப்படுத்தும் ஒரு வாசிப்பு-அறிதலாய் நாம் ஏன் பார்க்க முயலக் கூடாது? (கவனிக்க: எழுத்தாளர் யார் என்பது குறித்து நான் கவனம் கொள்வது இல்லை. இன/பால்/வர்க்க/சாதி எந்த அடையாளமாக இருக்கட்டும், அது என்னைப் பொறுத்தவரை எடுத்துரைப்பின்வழி கோரப்படும் அடையாளம் மட்டுமே)

தமிழன் என்பதற்கான இலக்கியங்களை `இனம்` சார்ந்து யாரும் பிரக்ஞை பூர்வமாய் எழுதிப் பார்க்கவில்லை. ஆனால், முஸ்லிம் இலக்கியம், முஸ்லிம் எழுத்துக்கள் பற்றிய விவாதங்கள் பெருவெளியில் நிகழ்ந்த போது நான் மிக உற்சாகமடைந்தேன், பங்கேற்றேன். ஏனெனில், அது ஒருவித புதிய அறிதல்முறையை அது எனக்குச் சொல்லி நின்றது. பெருவெளியின் பிரதியாளர்கள் வெளிப்படுத்திய தொகுப்பு அடையாளம் ஒன்றின் கூட்டு-மொழிதல்களின் சாத்தியப்பாட்டை முற்றிலும் மறுக்கும் தனியன்-வாத சிதறலொன்றை அவாவும் நிலைப்பாடு சங்கடமளிக்கிறது.

சுமதி சிவமோகன்: பெண்களின் யதார்த்தங்களும் அகநிலைகளும் அவற்றை எடுத்துக் கூறும் மொழிகளும் பலவிதமானவை. இவையெல்லாம் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும், அரசியல் தளங்களையும் சார்ந்து வரும் எழுத்துக்களாகும், எழுச்சிகளாகும்.

மித்ரா (ஹரி): “பலவிதமானவை“ என்று நீங்கள் கூறுவதை மீள-அழுத்த விரும்புகிறேன். “பலவிதமான“ வெளிப்பாடுகள் தமிழ்ப் பெண் கவிகளிடம் சாத்தியமாகவில்லையே என்ற ஆதங்கமே என் கட்டுரை. தனியே ஆணை நோக்கிய ஊடலையும், கூடல் விழைவையுமே திரும்பத் திரும்பக் கவிபாடிக் கொண்டிருந்தால் எதைத்தான் வாசிப்பது என்கிற சலிப்பின் வெளிப்பாடு அந்தக் கட்டுரை. ”எடுத்துக்கூறும் மொழிகள்” ஒரேமாதிரியானவையாக இருப்பதுவும் கண்கூடு.

“சூழ்நிலைகளையும், அரசியல் தளங்களையும் சார்ந்து வரும் எழுத்துக்களாகும்“ என நம்பிவிட நான் தயாராய் இல்லை. சூழ்நிலைகளும், அரசியல் தளங்களும் தெளிவான வித்தியாசங்களுடன் இல்லை அதனால்தான் எல்லாப் பிரதிகளும் ஒன்றுபோலிருக்கின்றன என்பதையும் நம்ப நான் தயாராக இல்லை. கவிதை என்பது ஏறக்குறைய “போலச் செய்யும்“ ஒரு செயற்பாடாய் இருப்பதில் தான் சிக்கலே. கவிதை மொழிதலை பால்நிலைப்படுத்தல் (gendering the art of poetry), அதன் சாத்தியமான பாதக அம்சங்களுடன் கூடவே, நிகழ்த்தப்பட்டுத்தான் ஆகவேண்டும். படிப்படியாக, விரும்பியோ விரும்பாமலோ அத்தகைய மொழிபுகள் தோன்றத்தான் செய்கின்றன. அவற்றை துரிதப்படுத்தும் விழைவில்தான் நான் அந்த ஒரு தொகைப் பிரதிகளை எழுத நேர்ந்தது.

———————————-

 (எனது பதில்களில் எடுத்தாளப்படும் அறிஞர்கள், கோட்பாட்டாளர்களை அடிக்குறிப்பிட்டு விரிவுறுத்தும் அளவுக்கு மூலங்கள் என் கைவசம் இல்லை. யாழ்.பல்கலைக்கழக நூலகத்திலிருந்து நடேசன் இராமரூபன் அவர்களின் உதவியில் பெற்ற ஃபெமினிஸ்ட் ரிவியூ, hypatia இதழ்கள் மற்றும் கோட்பாட்டு நூல்களில் இருந்து எடுத்த குறிப்புகளால் நிரம்பிய ஒரு நோட்டுப்புத்தகத்தின் துணையுடன் எனது விவாதப் புள்ளிகளை சரிபார்த்திருக்கிறேன். இதில் குறிப்பிடப்படும் Guardian விமர்சனத்தை அதன் வலைத்தளத்தில் தேட முயன்று தோற்றுப் போனேன். கார்டியன் வாசிக்கும் வசதிகளற்ற யாழ்ப்பாணத்தில் அக்குறிப்பு என் கைக்கெட்டியது எப்படி என்பதும் புரியவில்லை, ஏதோ ஒரு கல்விசார் இதழில் அது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். Jstorஇல் முயன்று பார்க்கிறேன். இணைப்புகள் கிடைப்பின் இங்கு இணைக்க உத்தேசம்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s